2018 பக்ரீத் சிறப்பு கட்டுரை – ச்சே. . . பீஜேவின் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்க விருப்பமேயில்லை – அல்ல
[பக்ரீத் பெருநாள் இன்று நல்லபடியாக நடந்தேறியது. பெருநாள் தொழுகை முடிந்து, குர்பானி கொடுத்து, சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் குர்பானி கறி பகிர்ந்துகொடுக்கப்பட்டது. பிரியாணி வாசனை கமகமக்க அருமையாக சமைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். கிராமங்களிலிருந்து சொந்தங்கள் பெரிய அண்ணாவின் விட்டிற்கு, அதாவது சென்னைக்கு வந்திருந்தார்கள். உமரும் தான் வேலை செய்யும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தான். மதியம் சாப்பிட்டதும் சொந்தங்கள் அனைவரும் மெரினா பீச்சுக்கும், ஷாப்பிங்கிற்கும் போய்விட்டார்கள். சிலர் மட்டும் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மணி மாலை 4 இருக்கும், மொட்டை மாடியில் உமர் உலாவிக்கொண்டு இருந்தான். அங்கு வந்து சேர்ந்தான், பெரியண்ணாவின் மகன் அப்துல்லாஹ்.]
அப்துல்லாஹ்: சித்தப்பா, மாடியில் தனியாக என்ன செய்துக்கொண்டு இருக்கீங்க?
உமர்: சும்மா காத்து வாங்கிக்கொண்டு இருக்கிறேன். நீ மெரினாவிற்கு போகவில்லை! கலைஞரின் சமாதியை கூட பார்த்துவிட்டு வந்திருக்கலாம் இல்லையா?
அப்துல்லாஹ்: இல்லே சித்தப்பா, நான் போகவில்லை. அப்பாவும், அம்மாவும் போகலே, நானும் அவர்களோடு இருந்துட்டேன்.
உமர்: ம்ம்ம்… சரி
அப்துல்லாஹ்: நீங்க நாளை ஊருக்கு கிளம்புறீங்க தானே!
உமர்: ஆமாம், வேலை இருக்கே! போகணுமே!
அப்துல்லாஹ்: உங்களோடு சில நிமிஷங்கள் பேசலாம் என்றுச்சொல்லி தான் நான் வெளியே கூட இன்னிக்கு போகலை.
உமர்: இது தான் காரணமா? அதனால் தான் நீ போகலையா. சரி சொல்லு என்ன பேசணும். ஏதாவது காதல் கத்தரிக்கான்னு பிரச்சனை இருக்கா?
அப்துல்லாஹ்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும் அவ்வளவுதான்.
உமர்: சரி சொல்லு.
அப்துல்லாஹ்: உங்களுக்கு தெரியாதது இல்ல. கடந்த சில மாதங்களாக பீஜே பற்றி வரும் செய்திகளை நீங்க கேள்விபட்டு இருப்பீங்க. நான் ரொம்ப வருஷமா அவருடைய குர்ஆன் மொழியாக்கத்தை படித்துக் கொண்டு வருகிறேன், ஆனா இப்போது அதை எடுத்து படித்தாலே போதும், அவர் செய்த காரியம் ஞாபகம் வருகிறது. அதனால அவருடைய மொழியாக்கத்தை படிக்கவே விருப்பமில்லை. ஒரு பெரிய மார்க்க அறிஞராக இருந்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்வது நியாயமா.? இது அவருக்கே அழகா இருக்கா? நீங்க என்ன சொல்றீங்க?
உமர்: இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? நானும் உன்னைப் போல, உன் மனநிலையோடு தான் இருக்கிறேன்.
அப்துல்லாஹ்: நீங்கள் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பலமுறை கொடுத்து இருக்கீறீர்கள். உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் என்று உங்களைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே! நீங்க பைபிள் படிப்பது எங்களுக்குத் தெரியும்? சர்சுக்கு போவது பற்றியும் தெரியும். அதனால் தான் நீங்கள் எங்களையெல்லாம் விட்டுவிட்டு தூரமாகச் சென்று வேலை செய்கிறீர்கள் என்பதும் தெரியும். நீங்க சர்சுக்கு போற விஷயமா பல மாதங்களுக்கு முன்பு, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த சண்டை கூட எங்களுக்கு தெரியும்.
உமர்: என்னைப் பற்றி பெரியவர்களுக்கு மட்டும் தெரியும் என்று நினைத்தேன் ஆனால் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.
அப்துல்லாஹ்: என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நான் பிஜே குர்ஆன் தமிழாக்கத்தை படிப்பதை விட்டு விடப் போகிறேன் ஏனென்றால் அதை எடுத்தவுடனே பிஜே உடைய இந்த தீய செயல் தான் ஞாபகம் வருகிறது. முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீங்க? இத்தனை வருஷமா இவங்க தான் உண்மையான இஸ்லாமை சொல்றவங்க என்று நினைச்சிட்டு இருந்தோம்.
நீங்களும் ஆரம்பத்திலே முஹம்மது ஜான் தமிழாக்கத்தை படித்துக்கொண்டு இருந்தீர்கள். பீஜேவின் தமிழாக்கம் வந்தவுடன், நீங்கள் தான அதனை நம் வீட்டில் . முதன்முதலில் அறிமுகம் செய்து, அதைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டினீர்கள். அதன் பிறகு நாம் அனைவரும் அதை அடிக்க ஆரம்பித்தோம். ஆனால், இப்போது பீஜேவின் விசயம் வேறுமாதிரியான வழியில் செல்வதால், உங்களிடமே இதற்கான தீர்வை கேட்கலாம் என்று நினைத்து நான் கேட்கிறேன்.
உமர்: இந்த கேள்வியை அப்பாவிடம் கேட்டு இருந்திருக்கலாம் அல்லவா!
அப்துல்லாஹ்: நான் கேட்டேன் ஆனால் அப்பா “நீ மார்க்க விஷயங்களில் தலையிடாதே! உன் வேலையை பார்” என்று சொல்லிவிட்டார். சரி நீங்க பக்ரீத்துக்கு இங்கே வரும் போது கேட்கலாம் என்பதற்காக நான் அமைதியாக இருந்துவிட்டேன்.
உமர்: நீ எந்த குர்ஆன் தமிழாக்கத்தையும் படிக்கலாம் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அது என்னவென்றால், பிஜே செய்த காரியம் கண்டனத்திற்கு உரியது அதற்கான தண்டனையை ஜமாத் கொடுத்தாக வேண்டும் அதே நேரத்தில் சட்டமும் இப்படிப்பட்ட காரியங்கள் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பிஜே எழுதிய புத்தகங்கள் மற்றும் அவருடைய குர்ஆன் தமிழாக்கம் என்பது அவருடைய திறமையின் மூலமாக கிடைத்தவைகள் அல்லவா? அவைகளை ஏன் புறக்கணிக்கவேண்டும்?
நடத்தையும் திறமையும்:
நன்றாக கவனி, திறமை வேறு நடத்தை வேறு. பிஜேயின் நடத்தை சரி இல்லை என்பது உண்மை தான், ஆனால் அவர் ஒரு நல்ல திறமைசாலி என்பதை மறக்கக் கூடாது. அவர் நடத்தை கெட்டவர் என்பது நிருபணமான ஒன்று. ஆனால் அவர் இதுவரை எழுதிய புத்தகங்களை நாம் தூக்கி வீசிட முடியாதல்லவா?
உன்னுடைய கேள்வி நியாயமானதுதான் ஒருவருடைய திறமையை பாராட்டுவதற்கு முன்பு அவர் நல்ல நடத்தை உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. முக்கியமாக மார்க்க விஷயங்களில் திறமைகளை காட்டிலும் நல்ல நடத்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
அப்துல்லாஹ்: ஆமாம், இதைத்தான் நானும் யோசித்தேன். மார்க்க விசயங்களில் திறமையுள்ளவனை விட நல்ல நடத்தை உள்ளவன் தான் நமக்கு தேவை.
உமர்: ஒரு பெரிய திறமைசாலி ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதேபோல ஒரு நல்லவன் ஒரு பெரிய திறமைசாலியாக இருப்பான் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
நீ சொன்னது போல இனிமேல் பிஜே தமிழாக்கத்தை படிப்பதை விட்டுவிட்டு வேறு ஒரு மொழியாக்கத்திற்கு நீ மாறிவிடலாம். ஏனென்றால் குறைந்தபட்சம் குர்ஆனை கையில் எடுக்கும் போதாவது பிஜே பற்றி நினைக்காமல் இருக்கலாம், அல்லவா!
அப்துல்லாஹ்: ரொம்ப நன்றி சித்தப்பா. ஆனால் எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால் இவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் இப்படிப்பட்ட சின்ன வேலைகளை செய்வாரா என்பது தான்!
உமர்: இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அப்துல்லாஹ்.
பிஜேவுடைய இந்த செயல்களுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் தான், பெரிய மார்க்க அறிஞர்கள், இப்படிப்பட்ட காரியங்களை செய்ய உற்சாகப்படுத்துகிறது.
அப்துல்லாஹ்: நீங்க என்ன சொல்றீங்க சித்தப்பா? பிஜேவுடைய இப்படிப்பட்ட கெட்ட செயல்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் காரணமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? கொஞ்சம் விளக்குங்களேன்?
உமர்:
சரி நான் சொல்வதை கவனமாக கேள். நீ அமல்கள் பற்றி, நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா? உதாரணத்திற்கு
• அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள்கிடைக்கும்.
• லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களைசெய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
• 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
• ஐந்து வேளை தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்கிடைக்கும்.
• நாம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 10 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.
• நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 20 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.
• நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு என்று பதில் ஸ்லாம் சொன்னால் 30 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.
• எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
• எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
• ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
• விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை கிடைக்கும்.
• ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும்.
• “ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
• இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்போன்றவர் ஆவார்.
• மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
• நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர்போன்றவர் ஆவார்.
• ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர்ஆவார்.
• தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது.
• மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை கிடைக்கும்
அப்துல்லாஹ்:
ஆமாம் அவைகள் எல்லாம் எனக்கு தெரியுமே. நன்மைகளுக்காகத் தானே நாம் தொழுகைக்கு தவறாமல் செல்கிறோம் ஜமாத்தாக தொழுகிறோம், சலாம் கூறுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வுலகில் வாழும்வரை நம்மால் முடிந்த வரை அமல்கள் செய்து நன்மைகளை குவித்துக்கொள்ளவேண்டுமல்லவா? இதன் அடிப்படையில் தானே நமக்கு கியாமத் நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
உமர்: சரியாகச் சொன்னாய்,
இப்பொழுது நாம் பிஜேவின் விஷயத்திற்கு வருவோம். பிஜே அவர்கள் எத்தனை முறை குர்ஆனை அரபியில் படித்திருப்பார்? ஒவ்வொரு எழுத்திற்கும் அல்லாஹ் பத்து நன்மைகளை பிஜே அவர்களின் கணக்கிலே சேர்ப்பான் என்பது நம்பிக்கை அல்லவா. அப்படியானால் கூட்டி கழிச்சு பாரு, பல ஆண்டுகளாக அவர் படித்த குர்ஆன் எழுத்துக்களுக்கு எத்தனை இலட்சக்கணக்கான நன்மைகளை அவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து இருந்திருப்பார். அதேபோல அவர் ஜமாத்தோடு தொழுவதற்காக எல்லோருக்கும் சலாம் சொன்னதற்காக இன்னும் எத்தனை இலட்சம் நன்மைகள் அவர் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும்.
இது மட்டுமல்ல அவர் குர்ஆன் மொழியாக்கம் செய்தபடியால் அவருக்கு அதிக நன்மையை அல்லாஹ் அவருடைய கணக்கில் சேர்த்துக் இருப்பான் இல்லையா?
அப்துல்லாஹ்: ஆமாம் இது உண்மைதான் கூட்டி கழிச்சு சொன்னால் பல கோடி நன்மைகள் அவருடைய பெயரில் அல்லாஹ் சேர்த்திருப்பான். ஒரு பேச்சுக்காக பிஜே அவர்களின் கணக்கில் இதுவரை 100 கோடி நன்மைகளைக் காட்டிலும் அதிகமாக அல்லாஹ் எழுதி இருப்பான் என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா.
உமர்: சரியாகச் சொன்னாய் அப்துல்லாஹ். ஆக அல்லாஹ் அவருடைய கணக்கில் வரவில் 100 கோடி நன்மைகளை சேர்த்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அதேபோல மனிதன் செய்யும் தீய செயல்களுக்கு அல்லது தவறுகளுக்கு அவர்களின் கணக்கிலிருந்து சில நன்மைகளை அல்லாஹ் நீக்கிவிடுவான் அல்லவா?
அப்துல்லாஹ்: ஆமாம், நிச்சயமாக. உதாரணத்திற்கு, இந்த விவரங்களைச் சொல்லலாம்.
நாய் வைத்திருந்தால் நன்மைகள் அழிந்து போகும்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. (ஸஹீஹுல் புஹாரி – 2322)
மது அருந்தியவனின் நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: யார் மது அருந்துகின்றானோ அவனுடைய நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஸுனன் திர்மிதி – 1862)
கடனாளியாக மரணித்தவரின் நன்மைகள் எடுக்கப்பட்டு அவரின் கடன் தீர்க்கப்படும்: ஒரு தீனார் ஒரு திர்ஹம் அளவு கடன் பட்ட நிலையில் யார் மரணித்தாரோ அவரின் நன்மைகளிலிருந்து அவரின் கடன் தீர்க்கப்படும் (ஸுனன் இப்னி மாஜஹ் – 2414)
அஸர் தொழுகையை விட்டால் நன்மைகள் அழிந்து விடும்: மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள் ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள். (ஸஹீஹுல் புஹாரி – 553)
ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் – 4488)
ஒருவர் இன்னொருவருக்கு ஏசியிருந்தால்? அவதூறு கூறியிருந்தால்………? அநியாயமாக ஒருவரின் சொத்தைப் புசித்திருந்தால்? ஒருவரின் இரத்தத்தைச் சிந்தியிருந்தால்?
திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள் யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை நோன்பு ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’ என்று கூறினார்கள். (முஸ்லிம் -5037)
உமர்:
சரியாகச் சொன்னாய். இதுதான் இஸ்லாம் சொல்லும் கோட்பாடு. மரிப்பதற்கு முன்பு நாம் நல்ல அமல்களை செய்து நன்மைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கியாமத் நாளில் அல்லாஹ் தம்முடைய தராசின் ஒரு தட்டில் நன்மைகளை வைத்து நம்முடைய தீய செயல்களை இன்னொரு தட்டில் வைப்பான் தீயவைகளை காட்டிலும் நன்மைகள் அதிகமாக இருக்குமானால் நாம் ஜெயித்தோம், இல்லையென்றால் தோல்வி (நரகம்) தான்.
அப்துல்லாஹ்: சுருக்கமாகச் சொன்னால் இது தான் சரி. எனவே தான் நன்மைகளை அதிகமாக்கிக் கொள்ள நாம் முயலுகிறோம்.
உமர்: இந்த கோட்பாடுதான் பிஜே போன்றவர்கள் தவறுகள் செய்வதற்கு காரணமாக இருக்கிறது.
அப்துல்லாஹ்: இது எப்படி? அமல்கள் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்வதற்கும், பீஜே போன்றவர்கள் செய்யும் நடத்தைக்கெட்ட செயல்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
உமர்: நான் இப்போது விளக்குகிறேன். நாம் பிஜேவின் கணக்கை எடுத்துக்கொள்வோம். அவருடைய கணக்கில் அல்லாஹ் 100 கோடி நன்மைகளை வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொள்வோம்.
இந்த 100 கோடி என்ற கணக்கு அல்லது ஒரு அதிக அமல்கள் தன்னுடைய கணக்கில் இருக்கின்றது என்று பிஜே அவர்களுக்கும் தெரிந்து இருக்கும் இல்லையா. ஏனென்றால் இஸ்லாமை அதிகமாக படித்து ஆய்வு செய்து பல புத்தகங்களை எழுதியவருக்கு அரபியிலிருந்து தமிழில் குர்ஆனை மொழியாக்கம் செய்தவருக்கு இஸ்லாமுடைய இந்த அல்லாஹ்வின் நன்மை தீமை தராசு கணக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
இப்போது பிஜே அவர்களும் ஒரு மனிதர் என்பதால் அவரும் சில சிறிய சிறிய தவறுகளை செய்யக்கூடும் அதனால் சில அமல்கள் அவருடைய கணக்கில் இருந்து அல்லாஹ் எடுத்துவிடுவான் இல்லையா! சில நேரத்தில் தேவையில்லாமல் அவர் கோபமாக பேசி இருக்கலாம். அதனால் சில அமல்கள் கழிக்கப்பட்டு விடும்.
ஆக பிஜே போன்ற அறிவாளிகள் தாங்கள் செய்யும் அமல்களின் எண்ணிக்கை மீது ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அதேபோல தாங்கள் செய்யும் தவறுகள் / தீய காரியங்கள் எப்படிப்பட்ட அமல்களை அழித்துவிடும் அல்லது தன்னுடைய கணக்கிலிருந்து நீக்கிவிடும் என்றும் அறிந்திருப்பார்கள் அல்லவா?
நம்முடைய கணக்கு படி பிஜேவின் கணக்கில் 100 கோடி நல்ல செயல்கள் இருந்தால் அவர் செய்யும் சில தவறுகள் மூலமாக சில நூறு அல்லது ஆயிரம் நன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். இது சரிதானே
அப்துல்லாஹ்: பிஜே மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமும் இப்படித்தான் வாழ்கிறான் இதுதான் இஸ்லாமின் கோட்பாடு நன்மைகள் அதிகம் செய்ய வேண்டும் அமல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அமல்களை அழிக்கும் செயல்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உமர்:
இதன்படி பார்த்தால் பீஜேவின் “அந்த பலான” நடத்தை கெட்ட செயலுக்கு ஒருவேளை
அல்லாஹ் ஆயிரம் அமல்களை குறைத்துக் கொள்வான் அல்லவா? அல்லது
பத்தாயிரம் அமல்களை அவருடைய கணக்கில் இருந்து எடுத்து விடுவான் அல்லவா?
அல்லது ஒரு லட்சம் நல்ல அமல்கள் அழிக்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோமா?
கடைசியாக அவர் செய்த தீய காரியங்களுக்கு 1 கோடி நன்மைகள் அல்லது அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று வைத்துக்கொண்டாலும் இன்னும் பிஜே கணக்கில் 99 கோடி நன்மைகள் மிஞ்சி இருக்குமல்லவா? இந்த கணக்கு சரியா?
அப்துல்லாஹ்: அவர் செய்தது சின்ன தவறு அல்ல மிகப் பெரிய தவறு
உமர்: சரி உன் கணக்கிற்கே வருகிறேன், அவர் செய்த அந்த தீய செயலுக்காக 99 கோடி அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்படி இருந்தும் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை கொடுப்பான் ஏனென்றால் அவரிடம் இன்னும் ஒரு கோடி நன்மை மிச்சமிருக்கிறது இது மாத்திரமல்ல அவர் இனிமேல் வாழும் நாட்களில் குர்ஆனைப் படிப்பார், ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் வீதம் அவருக்கு அல்லாஹ் கொடுப்பான். அவர் ஜமாஅத்தோடு தொழுதால் அதிக நன்மைகள் கிடைக்கும் இன்னும் பல வகைகளில் அவர் அமல்களைச் செய்து நன்மைகளை சம்பாதித்துக்கொள்வார். இது சரி தானே!
அப்துல்லாஹ்: இது குழப்பமாக இருக்கிறதே. அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்கும் போது, பூமியில் மனிதன் செய்த நன்மை தீமைகளை கணக்கில் வைத்துதான் நீதி செய்யமுடியும் அல்லவா? அப்படி இருக்கும்போது அதில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மக்கள் தப்பிக்க முயல்வது ஆச்சரியமாக இருக்கிறதே. உங்க லாஜிக் எனக்கு சிறிது புரிய ஆரம்பித்துள்ளது,
உமர்: இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அல்லாஹ்வின் இறையியல் கோட்பாடுகள் தவறானவைகள் ஆகும். முக்கியமாக இந்த நன்மை தீமை கோட்பாடு மிகவும் தவறான ஒன்று.
அப்துல்லாஹ்: அப்படியானால் பிஜே இதையெல்லாம் கணக்குப் போட்டு தான் அந்த பாவத்தை செய்து இருந்திருப்பார் என்றுச் சொல்கிறீர்களா?
உமர்: அவர் கணக்குப்போட்டு செய்தாரோ, அல்லது பாவம் செய்துவிட்டு, அதன் பிறகு கணக்கு போட்டுக்கொண்டாரோ, எனக்குத் தெரியாது.
ஒரு சராசரி முஸ்லிம் கூட ஒவ்வொரு நாளும் எப்படி தன் கணக்கில் நன்மைகளை அதிகபடியாக சேர்த்துக்கொள்ளலாம், எப்படி அந்த நன்மைகள் அழியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி தானே நாட்களை கடத்துகிறான். அதிக அமல்களைச் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்ளுங்கள் என்று தானே இஸ்லாம் சொல்கிறது.
சாதாரண மனிதனுக்கும் பிஜே போன்றவர்களுக்கும் இடையேஇருக்கும் வித்தியாசம் ஒன்று தான், அது நன்மைகளின் தீமைகளின் அளவு. அதாவது ஒரு சராசரி முஸ்லிம் தன் சக்திக்கு ஏற்ற அமல்களை செய்து குறைந்த அளவு தீயவைகளைச் செய்து எப்படியாவது அல்லாஹ்வின் தராசிலே நன்மைகள் அதிகமாக காணப்படும் படி செய்யவேண்டும் என்று நினைக்கிறான். அதேபோலத்தான் பீஜே போன்றவர்கள் அதிக நன்மைகள் செய்து இப்படிப்பட்ட சில தவறுகளினால் சில அமல்களை அல்லது பல அமல்களை இழக்கிறார்கள். இஸ்லாமின் கோட்பாடு சராசரி முஸ்லிமுக்கும், பீஜே போன்றவர்களுக்கும் ஒன்று தான்.
சராசரி முஸ்லிம் அல்லாஹ்வோடு செய்வது சிறுதொழில் வியாபாரம் போன்றது, பீஜே போன்றவர்கள் செய்வது ஏற்றுமதி இறக்குமதி போன்ற பிரமாண்ட வியாபாரம் போன்றது, ஆனால், அல்லாஹ்வின் கணக்கு வழக்கு எல்லாம் இருவருக்கும் சமமே. அதாவது வரவிலிருந்து (நன்மைகள்) செலவை (தீய செயல்கள்) கழித்துவிட்ட பிறகும், ஏதாவது மீதமிருக்கவேண்டும் அவ்வளவு தான்.
எது எப்படியானாலும் இஸ்லாமின் கோட்பாட்டின்படி கூட்டல் கழித்தல் கணக்கு தான் வாழ்க்கை. எத்தனை கூட்டப்படுகின்றன எத்தனை கழிக்கப்படுகின்றன என்பதில் ஒரு முஸ்லிம் கண் வைத்து வாழ்ந்தால் போதும், கடைசியில் அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பில் ஜெயித்துவிடலாம்,.
அப்துல்லாஹ்:
இதற்கு தீர்வு தான் என்ன? இந்தக் கோட்பாடு தவறு என்றால் சரியான கோட்பாடு எது?
உமர்: அல்லாஹ்வின் கணக்கு தவறானது. நீ சலாம் சொன்னால் உனக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்றுச் சொல்வதும், நீ இதைச் செய், உனக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்வதினால் தான் முஸ்லிம்கள் கணக்கு போட்டுக்கொண்டு வாழுகிறார்கள். முஸ்லிம்களை கணக்கு போட அல்லாஹ் கற்றுக்கொடுக்கின்றானே தவிர மனிதாபமானத்தோடு வாழும்படி கற்றுக்கொடுப்பதில்லை. அல்லாஹ் கணக்கு பார்க்கச் சொல்கிறானே தவிர, அதன் விளைவுகளை பாருங்கள் என்று சொல்ல தவறிவிட்டான்.
பிஜே போன்றவர்கள் பல கோடி நன்மைகளை செய்துவிட்டு அதன் பிறகு தெரிந்தே தீய செயல்கள் செய்வதற்கும் இந்தக் கோட்பாடுகள் உதவி புரிகின்றன. இறைவனுக்கு விருப்பமான வாழ்க்கையை ஒரு மனிதன் வாழ்கின்றானா இல்லையா? என்பதை பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் சொல்வது போல கணக்குப் போட்டு வாழக்கூடாது. நீ 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றாய், நீ 60 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் வெற்றி பெற்றாய், நீ 99 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதல் இடத்தை பிடித்தாய் என்று இஸ்லாம் கற்றுக்கொடுப்பதினால் உண்டாகும் விளைவுகள் இவைகள். இப்படிப்பட்ட இஸ்லாமிய இறையியல் சரியான இறையியல் அல்ல.
இன்னும் சில முஸ்லிம்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு அமல்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியாமல் பயந்து கொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பயத்திற்கும் இஸ்லாமிய கோட்பாடு தான் காரணம் பீஜே போன்றவர்களின் செயல்களுக்கும் இதுவே காரணம்.
சரியான கோட்பாடு எதுவென்றால் இறைவனிடம் கணக்குப் போட்டு வாழ்வது அல்ல, அதற்கு பதிலாக முழுவதுமாக நம்மை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதாகும். எத்தனை நன்மைகளை நாம் செய்தோம் என்று கணக்கு போடாமல், எப்படி வாழ்ந்தோம் என்று பார்க்கச் சொல்லும் கோட்பாடு தான் சரியான கோட்பாடு. மேலும், தவறுகள் செய்யும்போது மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அதன் பிறகு அப்படிப்பட்ட தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் தான் சிறந்த கோட்பாடு. கூட்டி கழிச்சி பாரு கணக்கு எல்லாம் சரியாக இருக்கும் என்று சொன்னால், நம்முடைய நிலைமை பிஜேயின் நிலைமை போலவே இருக்கும்.
பிஜே தாம் செய்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டாரோ, இல்லையோ தெரியாது. இஸ்லாமை நன்கு அறிந்து வைத்திருக்கும் பீஜே, தான் செய்த தவறுக்காக இஸ்லாமின் கோட்பாட்டின்படி தம்முடைய அமல்களின் எண்ணிக்கையில் சிலவற்றை குறைத்துக்கொண்டு இருந்திருப்பார் அவ்வளவுதான்.
அப்துல்லாஹ்:
உங்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்கட்டுமா? நியாயத்தீர்ப்பு விஷயத்தில் இஸ்லாமிய கோட்பாடு தராசிலே நிறுத்தி கணக்குப் பார்த்து மனிதர்களை தீர்ப்பு செய்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இந்த விஷயத்தில் கிறிஸ்தவத்தின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?
கிறிஸ்தவர்கள் செய்யும் நன்மைகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? கிறிஸ்தவர்களின் தீய செயல்கள் எப்படி கணக்கிடப்படுகின்றன? எதன் அடிப்படையில் அவர்கள் நியாயத்தீர்க்கப்படுகிறார்கள்?
உமர்:
நல்ல கேள்வியை கேட்டாய்.
கிறிஸ்துவத்தின் கோட்பாடு மிகவும் சுலபமானது. மனிதனுடைய நல்ல செயல்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக எடுபடாது. இறைவனுக்கு முன்பு நம்முடைய நீதியான செயல்கள் அனைத்தும் கந்தைத் துணிகள் போன்றவைகள் ஆகும். தேவன் எதிர்பார்க்கும் அளவிற்கு நம்மால் பரிசுத்தமாகவும் நீதியாகவும் வாழ முடியாது. இறைவனாக பார்த்து நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வு கொடுத்து, நான் உன் தீய காரியங்களை மன்னித்து இருக்கிறேன் இதுவரைக்கும் செய்தவைகளை மன்னித்து விட்டேன். இனி என் மீது நீ வைக்கும் விசுவாசமே அல்லது நம்பிக்கையே உன்னை என்னிடத்தில் சேர்க்கும். எனவே என்னை விசுவாசித்து நான் உனக்காக செய்தவைகளை நம்பி நீ வாழ வேண்டும். கூட்டல் கழித்தல் கணக்கு இனி உனக்கு இல்லை.
[உமர் பேசிக்கொண்டே இருக்கும் போது, அவரது அண்ணன் மேலே மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்]
உமரின் அண்ணா: நீங்க இரண்டு பேரும் இங்கே இருக்கீங்களா? அப்துல்லாஹ், நீ கீழே போ. நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்.
அப்துல்லாஹ்: சரி சித்தப்பா, நான் கீழே போகிறேன், பிறகு பேசலாம்.
[அப்துல்லாஹ் மாடியிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்]
உமரின் அண்ணா: நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?
உமர்: சும்மா, ஏதோ பேசிக்கிட்டு இருந்தோம்.
உமரின் அண்ணா: தம்பி, ஒரு முக்கியமான விசயம் பற்றி உன்னோடு பேசவேண்டும்.
உமர்: என்ன சொல்லுங்க அண்ணா!
உமரின் அண்ணா: நாம் பேசறது இரகசியமாக இருக்கட்டும். பீஜேவுடைய குர்-ஆன் தமிழாக்கத்தை நீ தானே எங்களுக்கு அறிமுகம் செய்தாய்!
உமர்: ஆமாம், இப்போது என்ன அதுக்கு?
உமரின் அண்ணா: ச்சே பீஜே செய்த காரியத்தினால், அவரது தமிழாக்கத்தை படிக்கவே முடியலே! தமிழாக்கத்தை எடுத்தாலே போதும், அவர் செஞ்சது தான் ஞாபகம் வருகிறது. நீ என்ன நினைக்கிறாய்? அதை படிக்கலாமா? அல்லது வேறு தமிழாக்கத்தை படிக்கலாமா?
உமர்:? ? ?
[உமர் மனதில் பேசிக்கொண்டான்… அடப்பாவமே… முழு தமிழ நாடும் இதே நிலையில் தான் இருக்கிறார்களா என்ன? ]
மறுபடியும் தொடர்ந்தான் உமர்,
இதுவரை அப்துல்லாஹ்விடம் சொன்ன விவரங்களை இரண்டாம் முறை சொல்ல ஆரம்பித்தான் உமர். . . .
தேதி: 22 ஆகஸ்ட் 2018
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments