top of page

2019 ரமளான் 4: இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 4: தொழுகை மொழி



பைபிளின் முக்கால் பாகம்(பழைய ஏற்பாடு) எபிரேய மொழியில் எழுதப்பட்டது, இயேசுவும் அவரது சீடர்களும் அராமிக் மற்றும் கிரேக்க மொழிகளில் பேசினார்கள், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இருந்த போதும், கிறிஸ்தவர்கள் எந்த மொழியில் தொழுதுக்கொண்டாலும் அது இயேசுவிற்கு புரிகின்றது. அவ்வளவு ஏன்! சிலரின் மௌன ஜெபம் கூட தேவனின் காதுகளில் சத்தமாக ஒலிக்கிறது, அவைகளுக்கு அவர் பதில்களையும் தருகிறார்.

முஹம்மது அரபி பேசினார், அவரது சஹாபாக்களும் அரபி பேசினார்கள், குர்‍ஆனும் அரபியிலேயே கொடுக்கப்பட்டது.  அரபி பேசும் மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் புரியவேண்டுமென்றால், தமிழ் மொழியிலா குர்‍ஆன் கொடுக்கப்படும்? இல்லையல்லவா! அதனால் தான் அரபி மொழியில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது.  ஆகையால், முஸ்லிம்கள் அதே அரபியில் தொழுதுக் கொள்ளவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார்.

இந்த கட்டளை அரேபியர்களுக்கு பொருந்தும், அரபியை கற்றுக்கொள்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்?  அரபியை தாய் மொழியாக இல்லாதவர்கள் கூட ஏன் அரபியில் தொழுதுக்கொள்ளவேண்டும்? அப்துல்காதர் அரபியில் தொழலாம், அமாவாசையும் அரபியில் தொழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

1) இஸ்லாமின் படி அரபி அல்லாத மொழியில் தொழுவது ஹராம்:

ஒருவருக்கு தெரியாத மொழியில் தொழுவதினால் என்ன பயன் கிடைக்கும்?  பொருள் உணராமல் அரபி வசனங்களை மனப்பாடமாக தொழுகையில் பயன்படுத்துவதினால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினால், “முஹம்மது சொன்னார், நாம் அதனை கேள்விகேட்காமல் பின்பற்றவேண்டும்” என்றுச் சொல்வார்கள். 100க்கு 99 முஸ்லிம்கள் பொருள் தெரியாமல் தான் அல்லாஹ்வை ஐந்து வேளை தொழுதுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தன் தாய் மொழியில் தொழுதால் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டானா? என்று கேட்டால் “ஆம், அங்கீகரிக்கமாட்டான்”  என்று தான் பதில் வருகிறது.  ஒரு தமிழ் முஸ்லிம் தமிழ் மொழியில் தொழுதால், அதனை அல்லாஹ் ஹராம் என்றுச் சொல்லுவான், அதாவது 'அந்த தொழுகை அனுமதிக்கப்படாது' என்றுச் சொல்லுவான்.

குர்‍ஆனை அரபியில் கொடுத்ததற்கு காரணம், அந்த மக்கள் அரபி பேசும் மக்களாக இருந்ததினால், அவர்கள் வசனங்களின் பொருள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அரபியில் இறக்கினானாம். அப்படியானால், தமிழ் மக்களுக்கு  தமிழாக்கம் செய்துக்கொண்டு, தமிழில் தொழுதால், ஏன் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை?


குர்‍ஆன்

12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

41:44. நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). 

43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

தாய் மொழியில் துவா செய்யும் போது, புரிந்துக்கொள்ளும் அல்லாஹ், தன்னை தொழும் போது மட்டும், பொருள் புரியாவிட்டாலும்   அரபியிலேயே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆச்சரியமான வேடிக்கையாக உள்ளதல்லவா?

அரபியில் தொழுவது தான் முஹம்மதுவின் படி ஹலால். ஆனால், இயேசுவின் படி ஹராம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2) இயேசுவின் படி அரபி தொழுகை ஹராம், தாய் மொழி / புரியும்  மொழி தொழுகை தான் ஹலால்:

மனிதர்களுக்கிடையே கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு ஒரு பாலமாக மொழி அமைந்துள்ளது. இறைவனுக்கும்  மனிதனுக்கு இடையே நடைப்பெற்ற முதல் உரையாடல் ஏதோ ஒரு மொழியின் வார்த்தைகளாகத்தான் வெளிப்பட்டு இருக்கும். புதிய ஏற்பாட்டில் கூட, பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கிய போது, அவர்களுக்கு பல மொழிகளில் பேசக்கூடிய வரத்தை அருளினார். அதனால் அவர்கள் பல  மொழிகளில் பேசினார்கள். எருசலேமில் கூடியிருந்த மக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, மக்களுக்கு தெரியாத மொழியில் சீடர்களை தேவன் பேச வைத்து இருந்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தேவன் குழப்பத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக, மக்களுக்கு புரியும் மொழியிலேயே அனைவரும் பேசும் வரத்தைக் கொடுத்தார். அங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும், என்பதற்கு தேவன் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஒருவர் நம் தாய் மொழியை பேசும் போது, அவர் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகும். வேற்று மொழியை பேசும் போது, அந்த ஈர்ப்பு அவ்வளவாக இருக்காது.  அன்று இயேசுவின் சீடர்கள் தங்கள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதைக் கண்டு அம்மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதன் பிறகு, பேதுரு என்ற சீடரின் பேச்சை கேட்டார்கள்.


அப்போஸ்தலர் 2:6-12 6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

12. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.   

மேலேயுள்ள பட்டியலில் அரபி மொழியும் இருப்பதை கவனிக்கவும்.

கிறிஸ்தவத்தை பொருத்தமட்டில், தேவனை ஆராதிக்கும் போதும், ஜெபிக்கும் போதும் நமக்கு  எந்த  மொழி பேசத்தெரியுமோ, எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில் ஆராதிக்கவேண்டும்.

எபிரேய மொழியில் மட்டும் தான் நீங்கள் என்னை ஆராதிக்கவேண்டும் என்று தேவன் ஒரு போதும் கட்டளையிடவில்லை. கிரேக்க அல்லது அராமிக் மொழியில் தான் என்னை தொழவேண்டும் என்று இயேசுவும் புதிய ஏற்பாட்டில் சொல்லவில்லை.

பொதுவாக, ஒரு மார்க்கம் இறைவனால் உண்டானதா? அல்லது மனிதனால் உண்டானதா? என்பதை அறிவதற்கு அனேக விவரங்களை நாம் சொல்லலாம். அவைகளில் பிரதானமானதாக நான் கருதுவது, அந்த மார்க்கத்தில் இறைவனை எந்த  மொழியில் தொழவேண்டும்? என்ற கேள்விக்கு, ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் தொழவேண்டும் என்று அந்த மதம் சொல்லுமானால், அது ஒரு கல்ட் அல்லது பொய்யான மதம் என்பதை அதன் மூலம் அறியலாம்.

தமிழில் அர்ச்சனை செய்தால், சாமி ஏற்றுக்கொள்ளாது என்றுச் சொல்வதற்கும், அரபியில் தொழுதால் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவ்விரண்டும் ஒரே இனத்தைச் சார்ந்த்தது தான்.

ஆக, இஸ்லாமின் அரபி மொழி தொழுகை முஹம்மதுவின் படி ஹலால் ஆகும், இயேசுவின் படி ஹராம் ஆகும்.  இதே போல, எந்த மொழியிலும் இறைவனை தொழலாம் என்ற கிறிஸ்தவத்தின் கோட்பாடு இஸ்லாமின் படி ஹராம் ஆகும், கிறிஸ்தவத்தின் படி ஹலால் ஆகும்.

முடிவுரை:

உலகில் 6500க்கும் அதிகமான மொழிகள் தற்போது பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. பைபிளின் இறைவன் இவைகள் அனைத்தையும் அறிவான். ஆனால், அல்லாஹ்வை அரபி என்ற ஒரே மொழியில் தான் தொழவேண்டும்.

இஸ்லாமில் தமிழில் கூட தொழமுடியும்? என்று எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது அறிக்கை வெளியிடமுடியுமா? தன் மசூதியில் தமிழில் தொழுவதை தொடங்கமுடியுமா? தமிழ் நாட்டு கோயில்கள் சிலவற்றில் தமிழில் அர்ச்ச‌னைகள் தொடங்கப்பட்டது போன்று, மசூதிகளிலும் தமிழில் தொழுகை அதாவது நமாஜ் செய்ய  அனுமதி கொடுக்கப்படுமா?

அரபியில் உள்ள குர்‍ஆன் வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்யும் போது, அதன் அர்த்தம் கெடுக்கப்பட்டுவிடும் என்று சில முஸ்லிம்கள் சொல்லலாம். அது  எப்படி பொருள் கெடும்?

  1. நீ தான் பெரியவன்!

  2. இறைவா என்னை காப்பாற்று!

  3. நல் வழியில் நடத்து!

  4. நீ தான் இறைவன், வேறு யாரும் உன்னைப்போல் இல்லை!

  5. நான் உன்னையே நம்பி இருக்கிறேன்!

  6. உன்னிடமே உதவியை கேட்கிறேன்!

என்று தமிழில் சொல்லி தொழுவதில் என்ன கெடுதி உண்டாகிவிடும்? பொருள் எப்படி மாறிவிடும்?

இதுவரை நாம் பார்த்த விவரங்கள்  மூலமாக  அறிவது என்னவென்றால், இஸ்லாம் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி அல்ல, முஹம்மது பைபிளின் நபிகளின் வழியில் வந்தவர் அல்ல என்பதாகும்.

இதுவரை “தொழுகை” என்ற ஒரு அம்சத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றியுள்ள விவரங்கள் எப்படி இயேசுவிற்கு ஒருவகையாகவும், முஹம்மதுவிற்கு இன்னொரு வகையாகவும் உள்ளது என்பதைக் கண்டோம்.

இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம்:


1) தொழுகை முறைகள் 2) 'கிப்லா' தொழுகையின் திசை 3) தொழுகையை/ஜெபத்தை முறிப்பவைகள் 4) தொழுகை மொழி

இன்னும் சில அம்சங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

அதுவரை ஹலாலை பின்பற்றுங்கள், ஹராமை விட்டு ஒழியுங்கள். இப்போது கேள்வி என்னவென்றால், எந்த ஹலால் எந்த ஹராம்? கிறிஸ்தவத்தின் படியா? இஸ்லாமின் படியா?

தேதி: 9th May 2019

 
0 views0 comments

Comments


bottom of page