2020 ரமலான் சிந்தனைகள் – 11:ஈஸாவின் பிறப்பு – சிறப்புப் பார்வை
ஏறக்குறைய 90 இடங்களில் ஈஸாஅல்-மஸிஹ் பற்றி குர்-ஆனில் இருக்கிறது என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன். அதில், மூன்றில் இரு பங்கு இடங்கள், சுமார் 60க்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள் ஈஸாவின் பிறப்பு சம்பந்தமானது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். குர்-ஆன் ஸூரா 3 மற்றும் 19 ல் மட்டுமே இந்த 60க்கும் அதிகமான வசனங்கள் இருக்கின்றனவாம். ஈஸாவின் பிறப்பு பற்றி குர்-ஆன் கூறும் பல விஷயங்களில் மிக முக்கியமானது என்னவெனில், ஈஸாவின் பிறப்பு ஆதாமின் பிறப்பைப் போன்றது என்பதாகும். ஆதாம் எப்படி தாய்தந்தையரின்றி இறைவன் மூலம் அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்டு மனிதனானாரோ, அது போன்றது இயேசுவின் பிறப்பு. மரியம் (ஈஸாவின் தாயார்) அவர்கள் திருமண உறவின்றி எப்படி ஆகும்? என்று கேட்டபோது, அல்லாஹ் இப்படிச் சொன்னதாகக் குர்-ஆன் 3:47, 59 வசனங்களில் வாசிக்கிறோம். அது மட்டுமல்ல, பிறக்கும்போது எல்லா மனிதர்களையும் தொட்டு கறைப்படுத்துகிற சைத்தான், ஈஸாவைத் தொடவில்லை என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஆயினும், குர்-ஆன் கூறும் ஈஸாவின் பிறப்புக் கதையை (கு. 3 & 19) நாம் வாசிக்கும்போது, ஈஸாவைத் தவிர மற்றவர்களைப் பற்றி அனேக வசனங்கள் இருப்பதைக் காண முடியும். இதை வாசிக்கும் நீங்கள், குர்-ஆன் அத்தியாயம் 3 மற்றும் 19 ஆகியவற்றுடன் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூலில் இயேசுவின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிரயோஜனமான இருக்கும்.
இயேசுவின் பிறப்பு பற்றி வேதாகமம் கூறுவதற்கும், குர்-ஆன் ஈஸாவின் பிறப்பு பற்றி கூறுவதற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருந்தாலும், பல விஷயங்கள் ஆச்சரியத்தையும் கேள்விகளையும் எழுப்புகிறதாக இருக்கிறது என்பதை நீங்கள் வாசிக்கையில் கண்டு கொள்வீர்கள். குர்-ஆன் ஈஸாவின் பிறப்பு பற்றி அதிகம் சொல்கிறதெனில், பரிசுத்த வேதாகமம் இயேசுவின் இறப்பு பற்றி கிட்டத்தட்ட முழு விவரங்களையும் துல்லியமாகத் தருகிறது. ஆண்டவராகிய இயேசுவின் அற்புதப் பிறப்பு மிகவும் சிறப்பானதுதான் என்றாலும், இந்த உலகில் உள்ள அனைவரும் தேவன் அருளும் இரட்சிப்பைப் இலவசமாகப் பெறுவதற்கேதுவாக, அவர் தம் அன்பை விளங்கப்பண்ணின இயேசுவின் பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மனித குலத்திற்கு மிகமிக முக்கியமானதாகும். ஈஸாவின் சிலுவை மரணம் பற்றி குர்-ஆன் மிகவும் சிக்கலான ஒரு தெளிவற்ற பார்வையை முன்வைக்கிறது. ஆகவே, முஸ்லீம்கள் சிலுவை மரணத்தை நம்புவதில்லை. சிலுவை மரணம் பற்றி பின்னர் விவரிக்கிறேன். ஈஸாவின் பிறப்பு பற்றி வாசிக்கையில், முந்தின ஆதாம் மற்றும் பிந்தின ஆதாம் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியது நினைவுக்கு வருகிறது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி கொரிந்து பட்டணத்தில் உள்ள சபைக்கு எழுதும்போது, “பிந்தின ஆதாம் (இயேசு) உயிர்ப்பிக்கிற ஆவியானார்” என்று 1 கொரிந்தியர் 15 ல் எழுதுகிறார்.
இந்த ரமலான் மாதத்தில்தான் அனேக தரிசனங்கள் மற்றும் சொப்பனங்கள் மூலமாக முஸ்லீம்கள் இயேசுவைக் காண்பதாக பல தரவுகள் சொல்கின்றன. இக்காலத்தில் குர்-ஆனை வாசிக்கும் முஸ்லீம்கள் “உயிர்ப்பிக்கிற” இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவரைப் பின்பற்றவும் வழிவாசல்கள் திறக்கப்படவும், இயேசுவை அவர்கள் கண்டு கொள்ளவும் ஜெபிப்போம். இயேசுவை அவர்களுக்கு நாம் காண்பிப்போம். ஆயத்தமா?
– அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 4th May 2020
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments