இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் – 2: இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டானா?
இந்த தொடர் கட்டுரையின் அறிமுக கட்டுரையில்(Link1 & Link2) நான் குறிப்பிட்டது போல, பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் சாத்தானும், குர்ஆனில் வருகின்ற ஷைத்தானும் வெவ்வேறானவர்கள் ஆவார்கள்.
இக்கருத்துக்கு ஆதரவாக 'ஷைத்தான் அல்லது இப்லீஸ் எதனால் படைக்கப்பட்டான்' என்ற விவரத்தை முதலாவதாக ஆய்வு செய்வோம்.
1) சாத்தான் எதனால் படைக்கப்பட்டன் என்று பைபிள் சொல்கின்றதா?
சாத்தான் ஆரம்பத்தில் எப்படி இருந்தான்? அவன் கர்வம் கொண்டு, தள்ளப்பட்ட பிறகு என்ன செய்துக்கொண்டு இருக்கின்றான்? அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கவுள்ளது? என்று பைபிள் சொல்கின்றதே தவிர, அவன் இந்த குறிப்பிட்ட பொருளினால் (அல்லது நெருப்பினால்) தான் படைக்கப்பட்டான் என்று பைபிள் எங்கும் சொல்வதில்லை.
தேவன் ஆதாமை மண்ணினால் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது, அதுபோல, ஷைத்தானை இந்த பொருளினால் தான் தேவன் படைத்தார் என்று சொல்வதில்லை. நாம் பார்க்கின்ற மற்றும் நம்மால் பார்க்கமுடியாதவைகள் அனைத்தையும் ஒரு சொல்லினால் தேவன் படைத்த போது, தேவதூதர்களை படைக்க தேவனுக்கு ஏதாவது ஒன்று (நெருப்பு) தேவை என்றுச் சொல்வது அறியாமையாகும்.
ஆதாமையும் தேவன் ஓரு சொல்லினால் படைக்கமுடியும், இருந்தபோதும் அவருடைய ஞானத்தின் படி, முன் தீர்மானத்தின் படி, பூமியைப் படைத்து, அதன் மண்ணைக்கொண்டு ஆதாமைப் படைத்தார். இதற்கு பல காரணங்களை இறையியலின் படி நாம் சொல்லலாம். இந்த கட்டுரைக்கு 'ஏன் ஆதாம் மண்ணினால் படைக்கப்பட்டான்' என்ற கேள்விக்கான பதில் தேவையற்றது, அதனை பிறகு பார்க்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், தேவதூதர்களை எந்த பொருளைக் கொண்டு படைத்தார் என்று பைபிள் சொல்வதில்லை, அது தேவையும் இல்லை. தேவதூதர்களையும் ஒரே சொல்லைக்கொண்டு தேவன் படைத்திருந்திருக்கலாம்.
2) ஷைத்தானை அல்லாஹ் நெருப்பினால் படைத்தான் என குர்ஆன் சொல்கிறது
அல்லாஹ்விற்கும், இப்லீஸுக்கும் இடையே நடந்த உரையாடலில், தன்னை அல்லாஹ் நெருப்பினால் படைத்தான் என்று இப்லீஸ் சொல்வதாக குர்ஆனில் சில வசனங்கள் வருகின்றன.
குர்ஆன் 7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
குர்ஆன் 7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
குர்ஆன் 38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
குர்ஆன் 15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
குர்ஆன் 15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இப்லீஸுக்கும் அல்லாஹ்விற்கும் மேற்கண்ட உரையாடல் நடந்ததா? இந்த உரையாடலில் உள்ள பிரச்சனைகள் என்னவென்பது பற்றி இங்கு நாம் பார்க்கவேண்டாம், அதனை பிறகு பார்க்கலாம். நாம் எடுத்துக்கொண்ட கருப்பொருள், இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டான் என்று குர்ஆன் சொல்கிறதா? இல்லையா என்பது தான். அப்படியானால், பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது? என்பதைப் பற்றி அலசுவதாகும்.
3) சாத்தான் படைப்பு பற்றி பைபிள் சொல்லவே இல்லையா?
சாத்தானின் படைப்பு பற்றி பைபிள் சொல்கிறது, ஆனால், எதனால் அவன் படைக்கப்பட்டான், அதாவது நெருப்பினால் அவனை தேவன் படைத்தார் என்று பைபிள் சொல்வதில்லை.
எசேக்கியேல் தீர்க்கதரிசனங்களில், தீரு இராஜாவைப் குறிப்பிடுவதுபோல, குறிப்பிட்டு சாத்தான் பற்றிய அழகான (ஆம், அழகான மற்றும் ஆச்சரியமான) விவரங்களை தேவன் சொல்லியுள்ளார். நாம் நினைப்பது போல, சாத்தான் என்பவன் பார்ப்பதற்கு கோரமானவன் அல்ல (எதிர்காலத்தில் அப்படி ஆகலாம்). ஒனிடா டீவி விளம்பரங்களில் வரும் சாத்தான் போன்று, கருப்பான உருவம், தலையில் இரண்டு கொம்புகள் மற்றும் பெரிய வால் போன்றவைகளோடு சாத்தான் இருப்பான் என்பது நம்முடைய கற்பனையாகும். அவன் ஒரு தேவதூதன்.
எசேக்கியேல் 28 : 11-16
11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
12. மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
13. நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
14. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
15. நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
16. உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
(மேற்கண்ட வரிகள் தீரு ராஜாவைப் பற்றி தானே சொல்கிறது, சாத்தான் பற்றி சொல்லவில்லையே என்ற கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையில் – லூசிபர் என்றால் யார்? இயேசுவும் அல்லாஹ்வும் லூசிபரா? விவரிக்கப்பட்டுள்ளது, அதனை படித்து தெரிந்துக்கொள்ளவும்).
முடிவுரை:
சரி, ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான் என்று குர்ஆன் சொல்கிறது, பைபிள் சொல்லவில்லை, இதனால் என்ன பிரச்சனை?
ஆம், இதில் மிகப்பெரிய பிரச்சனை முஸ்லிம்களுக்கு உள்ளது. அதாவது, பைபிளின் இறைவன் தான் அல்லாஹ் என்று அறியாமையில் சொல்லிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு இது ஒரு இடியாக உள்ளது. அதாவது, பைபிளின் இறைவன் வேறு, குர்ஆனின் இறைவன் வேறு. முந்தைய நபிகளின் தொடர் வழியாக அனுப்பப்பட்டவர் முஹம்மது ஆகமுடியாது. பைபிளின் நபிகளுக்கும், முஹம்மதுவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. முஹம்மதுவை அனுப்பின அல்லாஹ் வேறு, இதர நபிகளை அனுப்பின பைபிளின் தேவன் வேறு என்பது இதன் மூலம் அறியலாம்.
யெகோவா தேவன் சொல்லும் சாத்தானும், அல்லாஹ் சொல்லும் ஷைத்தானும் வெவ்வேறானவர்கள் என்று ஆகிவிட்டபிறகு, யேகோவா தேவன் எப்படி அல்லாஹ்வாக இருக்கமுடியும்? பைபிளின் இறைவன் எப்படி குர்ஆனை இறக்கியிருக்கமுடியும்? பைபிளில் சாத்தான் பற்றி ஒரு விதமாகவும், குர்ஆனில் வேறு விதமாகவும் எப்படி ஒரே இறைவன் சொல்லமுடியும்?
இன்னும் இஸ்லாமின் இப்லீஸ் பற்றிய வித்தியாசங்கள் தொடரும்…
உமர்
தேதி: 10th Feb 2019
“இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும்” கட்டுரைகள்
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments