குர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur’anic Verse)
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் குர்-ஆன் வசனம் படிப்பதை நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்! அல்லவா? ஆனால், அது தான் இவ்வாண்டு நடந்தது. ரயீத் அல் சலாஹ் என்பவரின் குறும்படத்திற்கு (த வைட் ஹெல்மட்ஸ்) ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வாங்க அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக, தனக்கு விருது வழங்கும் இவ்விழாவில் படிக்கும் படியாக அவர் ஒரு செய்தியை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியிருந்த செய்தியில் குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்று இருந்தது. அவரது செய்தியின் சாராம்சம் இது தான்: “எங்கள் ஸ்தாபனம் குர்-ஆனின் இவ்வசனத்தில் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது – ஒரு உயிரை காப்பாற்றுபவன், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை காப்பாற்றுபவனாகின்றான்” என்பதாகும்.
குர்-ஆனின் இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது இது முதல் முறையல்ல. பைபிளின் யோவான் 3:16ம் வசனம் போன்று, இது குர்-ஆனின் புகழ்பெற்ற வசனம். நம்முடைய ஜனாதிபதி திரு ஓபாமா அவர்கள், 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களுக்கு பிறகு, எகிப்தின் கெய்ரோ பட்டணத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு மேடையில் பேசினார். அப்போது இவ்வசனத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார். அக்கூட்டத்தில் அவர் கூறியதாவது: “பரிசுத்த குர்-ஆன் இப்படி போதிக்கிறது, அதாவது ஒரு அப்பாவி மனிதனை கொன்று போடுபவன், மனித சமுதாயம் முழுவதையும் கொன்று போடுகிறான். எவர் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றுகிறாரோ, அவர் முழு மனித சமுதாயத்தை காப்பாற்றுபவர் ஆகிறார்”. குர்-ஆனின் இவ்வசனத்தை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள், ஏனென்றால், அப்பாவி மக்களை கொல்லாதீர்கள் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதாக, இவ்வசனத்துக்கு அவர்கள் பொருள் கொள்கிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், ஒரு மனிதனை கொல்வது எப்படிப்பட்ட குற்றமென்றால், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை கொள்வதற்கு சமமான குற்றம் ஆகும். அதே போல, ஒரு மனிதனை காப்பாற்றினால், முழு மனிதவர்க்கத்தை காப்பாற்றியதற்கு சமம்.
நம்முடைய Stand to Reason கூட்டங்களில் நாங்கள் அடிக்கடி “பைபிளின் வசனத்தை படிக்காதீர்கள், பைபிளின் வசனங்களை படியுங்கள்” என்று போதிப்பது வழக்கம். பைபிளை படிக்கும் போது ஒரு பத்தியை, சில வசனங்களை அல்லது ஒரு அத்தியாயத்தை படியுங்கள், ஒரு வசனத்தை மட்டும் தனியாக படித்து பொருள் கொள்ளாதீர்கள் என்று போதிப்போம். வசனம் சொல்லப்பட்ட பின்னணியை படித்து தெரிந்துக்கொள்ளாமல், வசனங்களை புரிந்துக்கொள்ள முயலவேண்டாம் என்று நாங்கள் கூறுவோம். இந்த போதனை குர்-ஆனின் வசனங்களுக்கும் பொருந்தும். குர்-ஆனின் 5:32ம் வசனத்தின் உண்மை பொருளை புரிந்துக்கொள்ள அதன் பின்னணியை புரிந்துக்கொள்வது அவசியமாகும். காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்றது பற்றி குர்-ஆனின் 5:32 – 33ம் வசனங்கள் பேசுகின்றன:
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. (முஹம்ம்து ஜான் தமிழாக்கம்)
மேலே கொடுக்கப்பட்ட வசனங்களை அவைகளின் பின்னணியோடு படிக்கும் போது, இரண்டு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். முதலாவதாக, 32ம் வசனத்தில் அல்லாஹ் யூதர்களுக்கு கட்டளை கொடுக்கிறான், முஸ்லிம்களுக்கு அல்ல. இதனை “இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்ற வாக்கியத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம். அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளை கொடுக்கின்றான். ஆனால், அல்லாஹ் யூதர்களுக்கு ஒரு விதமாக 32ம் வசனத்தில் கட்டளை கொடுக்கின்றான், 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு வேறுவகையாக கட்டளை கொடுக்கின்றான்.
குழப்பம் செய்துக்கொண்டு திரிபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் படி அல்லாஹ் 33ம் வசனத்தில் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான். அது என்ன தண்டனை? “(அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்“. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இப்படி தண்டனை கொடுங்கள் என்று சொல்லியிருக்கும் போது, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 32ம் வசனத்தை பின்னணியைச் சொல்லாமல் படித்ததினால், ‘முஸ்லிம்கள் கொல்லக்கூடாது’ என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று மக்கள் நம்பவேண்டும் என்று நினைத்துள்ளார்கள். குர்-ஆன் 5:33ல் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொல்லப்படது போல, பெரும்பான்மையான முஸ்லிம்கள் கொல்கிறார்கள், வெட்டுகிறார்கள் வன்முறையில் ஈடுபடுகிறர்கள் என்று நான் இங்கு சொல்லவரவில்லை. இது ஆய்வு செய்யவேண்டிய வேறு தலைப்பு ஆகும், அதைப் பற்றி இங்கு அலச வேண்டாம். என்னுடைய பொது மேடை பேச்சுக்களில், எழுத்துக்களில் நான் பல முறை ‘பெரும்பான்மை முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்லியுள்ளேன். இக்கட்டுரையின் கருப்பொருள் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதைப் பற்றியதாகும், முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியல்ல.
இரண்டாவதாக, குர்-ஆன் 5:32ல் ‘அல்லாஹ்வின் வார்த்தை’ என்று சொல்லப்படும் விவரமானது, புராதன கால யூத பாரம்பரிய நூலில் ( தல்மூத் – மிஸ்னா சாண்டெரின் 4:5ம் வசனத்தில்) உள்ளதற்கு ஒத்து இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 4:10 ல் வரும் ‘காயின் தன் சகோதரன் ஆபேலை கொன்ற’ நிகழ்ச்சிக்கு எழுதப்பட்ட விளக்கவுரையைத் தான் தல்மூத் நூலில் 4:5ல் காண்கிறோம். தல்மூத் ஆசிரியர் கீழ்கண்ட விதமாக விளக்கவுரை எழுதுகிறார், இதன் ஒரு பகுதி தான் குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வசனமாக நாம் காண்கிறோம்:
தல்மூத் 4:5 விளக்கவுரை:
காயின் தன் சகோதரனை கொன்ற விஷயம் பற்றி வேதம் ‘உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது’ என்றுச் சொல்கிறது. மூல மொழியில் இந்த இடத்தில் ‘இரத்தம்‘ என்று ஒருமையில் சொல்லப்படாமல், ‘இரத்தங்கள்‘ என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் ஒரே ஒரு மனிதனை மட்டுமே படைத்தார், இவன் மூலம் முழூ மனித வர்க்கம் உருவாக்கப்பட்டது. இதனை புரிய வைப்பதற்குத் தான் ‘இரத்தங்கள்’ என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவன் ஒருவனைக் கொன்றான், ஆனால், அது முழு மனித இனத்தையும் கொன்றதற்கு சமமான குற்றமாக கருதப்படும். இதே போல, எவன் ஒரு தனி மனிதனை வாழவைக்கிறானோ (காப்பாற்றுகிறானோ), அவன் முழு மனித இனத்தையும் காப்பாற்றியதாக கருதப்படும்.
மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது, இது வேறு விஷயம். இந்த விளக்கவுரையின் சுவாரசியம் எங்கு தொடங்குகிறது என்று பார்த்தால், ‘குர்-ஆனின் ஆசிரியர் மேற்கண்ட யூத ரபியின் விளக்கவுரையின் கடைசி இரண்டு வாக்கியங்களை எடுத்துக்கொண்டு, அவைகள் ஒரு யூத ரபியின் சொந்த விளக்கவுரை என்பதை உணராமல், அவைகளுக்கு ‘அல்லாஹ்வின் வசனங்கள்’ என்று அடையாளமிட்டு குர்-ஆனில் புகுத்தியது தான்’.
இதுவரை கண்ட விவரங்களின் சாராம்சம் இது தான்:
1) ஆதியாகமம் 4:10 ம் வசனத்துக்கு ‘ஒரு தவறான விளக்கவுரையை எழுத’ ஒரு யூத ரபிக்கு அல்லாஹ் வஹி கொடுத்துள்ளான், அதன் பிறகு 400 ஆண்டுகள் கழித்து முஹம்மதுவிற்கு அதனை அறிவித்துள்ளான்.
அல்லது
2) குர்-ஆன் 5:32ல் அல்லாஹ்வின் வார்த்தை இல்லை, மேலும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தல்மூத் விளக்கவுரையிலிருந்து எடுத்து குர்-ஆனில் புகுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்களில் எது சரியானதாக இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. ஆஸ்கார் விழாவில் வாசிக்கப்பட்ட வசனமானது “பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை வாசித்தால்’ உண்டாகும் விளைவுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அடுத்த முறை யாராவது ஒரு மார்க்கத்தின் வசனங்களை வாசிப்பவர், ‘பின்னணியை ஒதுக்கிவிட்டு, தனியாக வசனங்களை’ வாசிக்காமல், அதைச் சுற்றியுள்ள முந்தைய பிந்தையை வசனங்களையும் வாசிக்கவேண்டும். இப்படி ஒருவர் செய்தால், அவருக்கு நிச்சயமாக ஆஸ்கார் விருதை தரலாம்.
Author: Alan Shlemon – A speaker for Stand to Reason
To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon
Translation: Answering Islam Tamil Team
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments