கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?
கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட அறிவுரையை பின்பற்றி 'நம்முடைய விசுவாசம் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தகுந்த சான்றுகளோடு பதில் கொடுப்பதாகும்'.
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)
“நாம் கிறிஸ்தவர்” என்று வெளியே தெரிந்தவுடன், அனேக வேளைகளில் பலர் பல கேள்விகளை கேட்பார்கள், சிலர் சில விஷயங்களை அறிந்துக்கொள்ள கேள்வி கேட்பார்கள், இன்னும் சிலர் நம்மை மட்டம் தட்ட கேள்வி கேட்பார்கள், அதாவது நாத்தீகர்கள் இறைநம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால் ஒரு சில கேள்விகளை கேட்பார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு நம் விசுவாசம் பற்றி பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு வேளை ஒரு முஸ்லிமை நாம் காணும்போது, அவருடைய குர்ஆனிலும் இயேசு பற்றியும், கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லியுள்ளதால், அவரும் நம்மிடம் கேள்வி கேட்பார். அப்போது நாம் அவருக்கும் பதில் சொல்லவேண்டும்.
இது ஒரு புறமிருக்க, சிலர் நம்முடைய நம்பிக்கையை பொய்யாக்க நம்மிடம் கேள்வி கேட்பதும் உண்டு, உதாரணத்திற்கு முஸ்லிம்களையும், நாத்தீகர்களையும் சொல்லலாம்.
உதாரணம் 1: முஸ்லிம்களோடு விவாதம்: விசுவாசம் தாக்கப்படும் போது, பதில் சொல்லத்தான் வேண்டும்.
ஒரு முஸ்லிம் நம்மைப் பார்த்து, இயேசு தெய்வமில்லை என்று குர்ஆன் சொல்கிறது என்று சொல்லும் போது, அந்த குர்ஆனை படித்து அவர் சொல்வது போன்று குர்ஆன் சொல்கிறதா? என்பதை தெரிந்துக்கொண்டு, அதன் பிறகு அவருக்கு நம்முடைய தற்காப்பு பதிலை கொடுப்போம். நம்முடைய விசுவாசத்தை தற்காத்துக்கொள்வதற்காக பதில் சொல்லும் போது, குர்ஆனையும் ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட நேரங்களில் சில உரையாடல்கள் சூடு பிடித்து, ஒரு திட்டமிட்ட விவாதமாகவும் நடக்க வாய்ப்பு உருவாகிவிடுகிறது.
உதாரணம் 2: நாத்தீக புத்தகங்களுக்கு மறுப்பு:
நாத்தீகர்களுடைய முதலாவது நோக்கம் “இறைவன் இல்லை” என்பதை நிருபிக்கவேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவர்களில் சிலர் இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு சான்றுகளோடு பதில் சொல்வார்கள், நாத்தீகர்களோடு கூட விவாதங்களிலும் ஈடுபடுவார்கள். இதில் தவறு ஏதுமில்லை.
உதாரணம் 3: கள்ள உபதேசங்களுக்கு பதில்கள்:
அவ்வப்போது சில கள்ள உபதேசங்கள் எழும்புகின்றன, பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நாம் பதில் சொல்லவேண்டிய நிற்பந்தத்தில் தள்ளப்படுகிறோம்.
உதாரணம் 4: வலியச் சென்று விவாதம் புரிவது
மேலே சொன்னவைகள் ஒரு பக்கம் இருக்கும்போது, நாம் வாழும் சமுதாயத்தில் சில தவறான பழக்கவழக்கங்கள் நம் கண் எதிரே நடக்கும் போது, அவைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. நமக்கு உடனே ரோஷம் வந்து (ஆவி கொழுந்துவிட்டு எரியும் போது என்று ஆவிக்குரிய வட்டாரத்தில் இதனைச் சொல்லுவார்கள்), களத்தில் இறங்கி நியாயம் சொல்லவும், தீமையை கண்டித்துக் கேட்கவும் தொடங்கும் போதும் 'விவாத கேள்வி பதில்கள் நடைப்பெற வாய்ப்பு வாய்த்துவிடும்'.
உங்களுக்கு இந்த பாயிண்டு புரியவில்லையா? இதோ விளக்குகிறேன்.
நம் கண்ணெதிரே, சதி என்றுச் சொல்கின்ற பழக்கத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இந்த பழக்கம் இருந்தது. கணவன் மரித்துவிட்டால், மனைவியையும் உயிரோடு வைத்து கொளுத்துவிடுவார்கள் (நல்ல பாரம்பரியம்!). அதே போல, சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, மேலும் தேவதாசி என்றுச் சொல்லி கோயிலுக்கு நேர்ந்துவிட்ட பெண்களை தவறாக பயன்படுத்தும் பழக்கம் போன்றவை இந்தியாவில் இருந்தன. இப்படிப்பட்டவைகளை பார்க்கும் போது, ஒரு கிறிஸ்தவனால் சும்மா இருக்கமுடியாது. இயேசு இவர்களின் உள்ளத்தில் இல்லாததால் தான் இப்படி 'தவறான பழக்கங்களுக்கு இவர்கள் அடிமையாகியுள்ளார்கள்' என்றுச் சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறும் போது, அது சண்டையாகவும், சில நேரங்களில் விவாதமாகவும், நம்முடைய உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுவதுண்டு.
உதாரணம் 5: சுவிசேஷ கடமையை நிறைவெற்றப்போக அது விவாதமாக மாறும் சூழ்நிலை
எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு நமக்கு கொடுத்த கடமையாகிய 'நற்செய்தியை அறிவிப்பது' அனேக நேரங்களில், விவாதங்களாகவும் மாறிவிடுவதுண்டு. மற்ற மார்க்கத்தார்கள் நம்மை திட்டித்தீர்ப்பதும் இந்த கடமையை நிறைவேற்ற நாம் முயலுவதும் தான். நாம் நற்செய்தியையும், நம் சாட்சியையும் சொல்லாமல் இருக்கமுடியாதே! இயேசு செய்த அற்புதங்களையும், வாழ்வைப்பற்றியும் சாட்சி பகராமல் இருக்கமுடியாதே!
பெரும்பான்மையாக, எல்லா மக்களும் கேட்பது, 'ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை அறிவிக்காமல் இருப்பதே இல்லை! எங்களுகெல்லாம் சாமி இல்லையா?' என்பதைத் தான். நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்! 'யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்' என்ற வாக்கியத்தின் படி, என் இரட்சிப்பை உலக மக்களுக்கு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றாமல் இருக்கமுடியாதே!
கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்கள், 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட இரண்டாம் பாகத்தை மறக்கக்கூடாது: சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பதில் சொல்லவேண்டும்.
“யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)”
நற்செய்தி அறிவிக்கும் போது விவாதம் புரிவது பைபிளின் படி சரியானதா?
கிறிஸ்தவர்களில் சிலர் 'நாம் விவாதம் புரியக்கூடாது, பதில் சொல்லக்கூடாது, இது பைபிளின் சரி தவறானது, வெறும் நற்செய்தி மட்டும் தான் சொல்லவேண்டும்' என்று கூறுகிறார்கள். இது தவறான புரிதலாகும். நாம் ஒருவருக்கு நற்செய்தியைச் சொல்லும் போது, அவர் அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர் பல கேள்விகளை கேட்டு, நம்மிடம் சரியான பதில்களை எதிர்ப்பார்ப்பார். சில நேரங்களில் அவரது தவறான புரிதலை நாம் அவருக்கு விளக்கவேண்டும், அவரது தற்போதைய நம்பிக்கையில் உள்ள வித்தியாசங்களை அவருக்கு எடுத்துக் காட்டவேண்டும்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு சான்றுகளோடு கூடிய பதில்களைக் கொடுப்பது தான் 'விசுவாச தற்காப்பு ஊழியம்' என்பது, இது தவறு என்று எப்படி சொல்லமுடியும்? 1 பேதுரு 3:15 சொல்வதும் இதைத் தானே!
விசுவாச தற்காப்பு ஊழியம் பற்றி நாம் கற்கவேண்டுமென்றால் நாம் முதலாவது இயேசுவிடம் தான் கற்கவேண்டும்.
இயேசுவும் விசுவாச தற்காப்பு ஊழியமும்:
இயேசுவிடம் பலர் கேள்விகளை கேட்டனர், கற்றுக்கொள்ளவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் இருந்தனர், இயேசுவை கேலி செய்யவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் உண்டு.
இயேசு எல்லோருக்கும் ஒரே மாதிரியான பதிலை கொடுக்கவில்லை. சிலரிடம் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டார், சிலருக்கு நேரடி பதில் கொடுத்தார். சிலரின் கேள்விக்கு ஒரு உவமையை பதிலாகச் சொன்னார், நேரடி பதில் தரவில்லை. தன்னிடம் கேள்வி கேட்பவர்கள் சிந்திக்கும் படிச் செய்தார்.
இயேசு 307 கேள்விகளை கேட்டதாகவும், அவர் நேரடியாக வெறும் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுத்ததாகவும், ஒருவர் ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்:
ஆக, விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது பைபிளுக்கு எதிரான செயல் அன்று.
விசுவாச தற்காப்பு ஊழியத்திற்கு யோபு புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு:
பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு புத்தகத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தாலும், அது பல கேள்விகளாலும், ஞான வார்த்தைகளாளும், விவாதங்களாளும் நிரம்பியிருப்பதை பார்க்கமுடியும். யோபுவும், அவரது நண்பர்களும் ஒருவர் மாறி ஒருவர் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்வார்கள். கடைசியாக, தேவனும் யோபுவிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். யோபுவின் அந்த நிலைக்கு காரணம் யோபுவின் அநீதியான வாழ்க்கை என்று அரவது நண்பர்கள் குற்றம் சாட்டினார்கள். உடனே யோபு தன் நிலைப்பற்றி விவாதம் புரிந்தார். இப்படி பல முறை நடந்தது.
அப்போஸ்தலர் பவுலடியாரின் விவாதங்களும் தற்காப்பு ஊழியமும்:
பவுலடியார் ஊழியம் செய்யும் போதும், அது பல வேளைகளில் விவாதங்களாக, பேச்சுவார்த்தைகளாக மாறியதை பார்க்கமுடியும்.
கிரேக்கர்களிடம் பேசும் போதும், யூத ஆலயங்களில் பேசும் போதும் அவர் பல காரியங்களை விவாதங்களாக பதில்களாக முன்வைத்தார். ராஜாக்களுக்கு முன்பாக தன் நம்பிக்கைப் பற்றி சாட்சி சொல்லும் போது, மிகவும் தைரியமாக அதனை சொன்னார், சாட்சி சொல்வதும் ஒரு 'கிறிஸ்டியன் அபாலஜிடிக்ஸ்' இல்லையா?
கிரேக்கர்களாகிய மேதாவிகளிடம் பேசினார், இயேசுவின் நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கையையும் தொட்டுத் தான் பேசினார்.
அப்போஸ்தலர் 17:
2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்
19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.
எனவே, கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்டது போன்று நம் விசுவாசம் குறித்து சாட்சி சொல்லி, மக்களின் சந்தேகங்களை தீர்க்கப்பட உதவி செய்து, மக்கள் சிந்திக்கும்படி சில வேளைகளில் எதிர்கேள்விகள் கேட்டு, நற்செய்திச் சொல்வதாகும்.
தேதி: 27th July 2020
Recent Posts
See All(How Is Christianity Different From Other Religions?) கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? கிறிஸ்தவம் தனிச்சிறப்பு...
நாம் பைபிளை மட்டுமே படிக்கவேண்டும், வேறு எந்த தவறான கோட்பாடுகளையும், மதங்களையும் படிக்கவே கூடாது – இன்று பரவலாகவும் இலவசமாகவும்...
Comments