பாகம் 5 – இயேசுவை காப்பாற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறைய முயலும் செண்பகப்பெருமாள்!
திரு செண்பகப்பெருமாள் அவர்களின் “யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்” என்ற புத்தகத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.
இவர் முகவுரையில் எழுதிய 2 – 5 வரையுள்ள பத்திகளுக்கு இந்த கட்டுரையில் பதிலைக் காண்போம்.
இவர் தன் புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரித்து தன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்:
பைபிளின் பழைய ஏற்பாடு
பைபிளின் புதிய ஏற்பாடு
பைபிளின் கருத்துக்கள் – ஓர் அலசல்
இவர் புதிய ஏற்பாடு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இவரது இரண்டாவது பாகத்தில் பதிலைத் தரலாம். ஆனால், முகவுரையிலேயே புதிய ஏற்பாடு மீது இவர் நேரடியாக தன் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியதால், அவைகளுக்கு பதிலைச் சொல்லவேண்டியுள்ளது.
திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதியவைகள்: இவர் எழுதிய பத்திகளை அப்படியே மேற்கோள் காட்டாமல், அவைகளிலிருந்து முக்கிய விவரங்களை எடுத்து கீழே பாயிண்டுகளாக தருகிறேன்.
முகவுரை, பக்கம் 9 & 10 (யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்):
பவுல் மதம் என்னும் அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறோர் நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
கி.பி. 49ல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டு வர முயன்றார்
மதங்களை விட மாறுபட்ட ஒன்றை 'கிறிஸ்து (Christ)' என்ற ஒற்றைச் சொல்லை அறிமுகப்படுத்தினார்
இந்தச் சொல் மனிதர்களிடையே பேதம் காட்டுதல் கூடாது என்னும் பொருள் கொண்டதாக இருந்தது.
பவுலின் இக்கொள்கை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது
கிறிஸ்து என்ற சொல்லும், அதில் பொதிந்துள்ள பொருளும் பைபிள் மரபுக்கு உரியதல்ல.
கொலோசேயர் 1:25-27 யூதர்களிடம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது இக்கொள்கை, புறஜாதியாரிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்தது என்று பவுல் கூறியதாக குறிப்பிடுகிறார்.
பவுல் தம் புதிய ஏற்பாட்டு நூல்களில் மதம் சார்பற்ற கடவுளாக 'கிறிஸ்து' என்ற சொல்லைக்கொண்டு அறிமுகம் செய்கிறார்.
பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள்.
இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்டமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டது
பவுல் இயேசுவையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திக்காட்டினார், ஆக, உயிரோடு இருந்த காலத்தில் இயேசு ஒரு மேசியா மட்டுமே, அவர் சிலுவையில் மரித்த பின்னர் தான் கடவுளின் ஆவி அவர் மீது இறங்கியது, அதனாலே அவர் உயிரோடு எழுப்பப்பட்டார், அதன் பின்பு தான் அவர் கிறிஸ்து என்னும் கடவுளின் மகன் ஆனார் (ரோமர் 1:2-5)
என்று முகவுரையின் இரண்டாவது பத்தியிலிருந்து பல குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளார் திரு செண்பகப்பெருமாள். மேற்கண்ட கருத்துக்களில் பல அடிப்படையான தவறுகளை செண்பகப்பெருமாள் செய்துள்ளார். அவைகளின் உண்மை நிலையையும், செண்பகப்பெருமாளின் அறியாமையையும், பைபிளின் நம்பகத்தன்மையையும் இப்போது பதிலாக காண்போம்.
1) அந்த மூன்று ஆண்டுகள்!
கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பெரும்பான்மையாக செய்யும் தவறு என்னவென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடந்த 3 ஆண்டு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய விட்டுவிடுவதுதான். கிபி 30ல் இயேசு மரணித்து உயிர்த்தெழுகிறார், அதன் பிறகு இயேசுவின் சீடர்கள் எருசலேம் நகரில் இருந்து கொண்டு இயேசு சொல்லியபடி ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். யூதர்கள் இவர்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள், இயேசுவை பற்றி பிரசங்கம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். கிறிஸ்தவ சபையை துன்புறுத்தி, ஸ்டீபன் என்ற சீடரை யூதர்கள் கல்லெறிந்து கொன்றார்கள். இந்த கொலைக்கு உதவியாக சவுல் என்ற யூதரும் இருந்தார்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு மரித்து உயிர்த்தெழுந்த விட்ட பிறகு, மூன்றாண்டுகள் கழித்து சவுல் என்பவரை இயேசு சந்தித்து அவர் மனம் திரும்பும்படி செய்தார்.
கிறிஸ்துவத்தில் காணப்படும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எல்லாம் சவுல் தான் காரணம் என்று திரு செண்பகம் பெருமாள் போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சவுலுக்கு/பவுலுக்கு முன்பு மூன்று ஆண்டுகள் இயேசுவின் சீடர்கள் எவைகளை போதித்துக் கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விக்கு செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பதில் சொல்ல முன்வருவதில்லை! ஏனென்றால் இவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளுக்கும், பவுல் மீது இவர்கள் வைக்கும் அனேக காரணமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் இந்த மூன்று ஆண்டுகள் பதில் சொல்லிவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்பவர், பவுலின் மீது குற்றம் சுமத்தமாட்டார்.
எனவே இந்த மூன்று ஆண்டுகளில் நடந்தவைகளை பேசாமல் அதற்குப் பின்பு நடந்தவைகளை மட்டுமே இப்படிப்பட்ட ஆய்வாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் வஞ்சகத்தை படம் போட்டு காட்டுகிறது. முஸ்லிம் அறிஞர்கள் செய்வதும் இதே தவறைத்தான்.
இயேசுவிற்கு பிறகு சீடர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தாங்கள் முன்பு செய்துக்கொண்டிருந்த மீன் பிடிக்கும் வேலைக்கு சீடர்கள் சென்றுவிட்டார்கள்! ஆனாலும் இயேசு அவர்களை சந்தித்து, மேசியாவாகிய தாம் இவ்வுலகத்தில் வந்த முழு நோக்கத்தையும், அவர் விட்டுச் சென்ற ஊழியத்தையும், எப்படி செய்யவேண்டும் என்று சீடர்களுக்கு விவரமாக சொல்லிவிட்டு சென்றார். பவுல் என்பவர் கிறிஸ்தவ சரித்திரத்தில் ஒரு நல்ல பாத்திரமாக மாறுவதற்கு முன்பு, அவர் ஒரு வில்லனாக இருந்தார். அவர் ஏன் வில்லனாக இருந்தார்? அவரை வில்லனாக மாற்றியது யார்? கிறிஸ்துவத்தின் எந்த கோட்பாடு, அவர் கிறிஸ்தவர்களை கொலை செய்யத் தூண்டியது? போன்றவைகளை ஆய்வு செய்தால், செண்பகபெருமாளின் ஆய்வுகள் அனைத்தும், ஒன்றுமில்லாமல் போய்விடும். அவருக்கு நெஞ்சில் உறமிருந்தால், நேர்மையிருந்தால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆய்வு செய்து கொடுக்கட்டும்!
கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏன் யூதர்களை கோபப்படுத்தினது என்று? ஆய்வு செய்தாலே, செண்பக பெருமாளின் புத்தகத்திற்கான பதில் கிடைத்து விடும். பவுலடியார் ஒரு நல்லடியாராக மாறி சொல்லியவைகளை குற்றப்படுத்தும் செண்பகப்பெருமாள், அதே பவுலடியார் ஒரு வில்லனாக இருந்தபோது நடத்திக்காட்டிய அவரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இருந்தால் இப்படிப்பட்ட அரைகுறை புத்தகங்களை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்காது.
ஆக, கிறிஸ்தவத்தின் முதல் மூன்றாண்டுகளில் , கிறிஸ்துவத்தின் அஸ்திபாரங்கள் மிகவும் ஆழமாக போடப்பட்டன. இயேசுவின் நேரடி சீடர்களால், அவரை கண்டவர்களால், அவரைத் தொட்டு பேசியவர்களால், இயேசுவின் அற்புதங்களை கண்களால் கண்ட சீடர்களால் கிறிஸ்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.
இயேசுக் கிறிஸ்து யார்?
இயேசுவிற்கும் பழைய ஏற்பாட்டுக்கும் சம்மந்தம் என்ன?
கிறிஸ்தவ சபை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கமென்ன?
ஏன் சீடர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய விரும்பினார்கள்?
போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அந்த முதல் மூன்று ஆண்டுகளில் கிடைத்துவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்யாதவர்கள், அடுத்த 30 ஆண்டுகள் பற்றி ஆய்வு செய்து என்ன பயன்?
செண்பகப்பெருமாள் செய்த முதல் தவறு, இயேசுவிற்கு பிறகு முதல் மூன்று ஆண்டுகளை, இயேசுவின் நேரடி சீடர்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். அதனால் தான் இப்படிப்பட்ட அரைகுறையான ஆய்வுகளை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.
கி.பி. 49 இல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டுவர பவுல் விரும்பினார் என்று குற்றம் சாட்டுகிறார் திரு செண்பகப்பெருமாள். இவரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்:
முதல் மூன்று ஆண்டுகளில் பைபிளின் நடைமுறை கொள்கை என்னவாக இருந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?
கி.பி. 49 காலகட்டத்தில் “பைபிளின் நடைமுறை கொள்கை” என்று நீங்கள் சொல்கிறீர்களே! இங்கு பைபிள் என்று எதனை குறிக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டையா? பழைய ஏற்பாட்டின் நடைமுறை கொள்கை என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?
இயேசுவிற்கு பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னால் நடந்தது என்ன என்று சொல்ல வந்துவிட்டீர்கள். முதல் மூன்று ஆண்டுகள் என்ன நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?
கிறிஸ்தவம் என்ற இயக்கம் அல்லது மார்க்கம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
இயேசுவிற்கு பிறகு அந்த 11 சீடர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
அவர்கள் கிறிஸ்தவத்தை ஏதோ ஒரு லாபத்திற்காக தொடங்கியிருந்தால், அதற்காக ஏன் தங்கள் உயிர்களை அவர்கள் தியாகம் செய்தார்கள்?
ஏன் ஆதி கிறிஸ்தவர்கள், சீடர்கள் தங்கள் உயிர்களைக் காட்டிலும், தங்கள் கோட்பாடுதான் முக்கியம் என்று கருதினார்கள்? இயேசு தெய்வமில்லை என்று அவர்கள் நம்பியிருந்தால், ஏன் உயிரை இயேசுவிற்காக துச்சமாக மதித்தார்கள்?
போன்ற கேள்விகளுக்கு செண்பகப்பெருமாள் போன்றவர்களால் பதில் சொல்ல முடியாது. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள், உண்மை புரியும், இவைகள் எல்லாம் பவுலடியார் வில்லனாக இருந்த போது நடந்தவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் என்னுடைய முதல் கட்டுரையில் சொன்னது போல, செண்பகப் பெருமாள் அவர்களுக்கு காலவரிசை குழப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அவர் வேண்டுமென்றே காலங்களை வருடங்களைக் குழப்பி தன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இப்படிப்பட்ட வஞ்சகமான செயல்களை கிறிஸ்தவர்கள் சீக்கிரமாக கண்டு கொள்வார்கள்.
இவர் இன்னும் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
2) செண்பக பெருமாளின் ஆய்வை கிழித்தெறியும் கிறிஸ்து என்ற சொல்
மதம் என்ற அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறொரு நிலைக்கு மாற்றும் முயற்சியில் பவுல் ஈடுபட்டார் என்று இவர் குற்றம் சாட்டுகிறார். இவரது வரியிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் இவருக்கு கிறிஸ்தவ சரித்திரம் தெரியவில்லை என்பதாகும். இயேசுவிற்கு பிறகு, சீடர்கள் யூத மதத்தை பின்பற்ற வில்லை, அப்படி அவர்கள் பின்பற்றி இருந்தால் அவர்களை ஏன் யூத மதத் தலைவர்கள் கொலை செய்வார்கள்? சீடர்களை ஏன் அவர்கள் ஊர் ஊராகத் துரத்துவார்கள்? பவுல் போன்றவர்கள் ஏன் ஒவ்வொரு திருச்சபையாக சென்று அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்? இந்த அடிப்படை அறிவு அல்லது வித்தியாசத்தைக் கூட தெரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு செண்பகப்பெருமாளின் மேதாவித்தனம் இடம்தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
செண்பகப்பெருமாள் அவர்களே! தன் யூதமார்க்கத்தில் மிகவும் தீவிரமாக இருந்த சவுல் என்பவர், கிறிஸ்தவர்களும் அதே யூதமார்க்கத்தை பின்பற்றி இருந்திருந்தால், அவர்களை தன் தலையில் வைத்துக் கொண்டாடி இருந்திருப்பாரே தவிர, அவர்களின் தலையை சீவ வாளை தூக்கி இருந்திருக்கமாட்டார்!
அதுவும் இயேசுவுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து யூத மார்க்கத்தை வேறு ஒரு நிலைக்கு கொண்டுச் செல்ல முயன்றார் என்று நீங்கள் சொல்வது முட்டாள்தனமான வாதமாகும்.
கிறிஸ்து என்ற சொல்
அடுத்தபடியாக கிறிஸ்து என்ற சொல்லை குறித்து செண்பகப் பெருமாள் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை காண்போம். இதனைக் குறித்து இன்னும் விவரமாக அவருடைய புத்தகத்தில் அவர் எழுதிய இரண்டாம் பாகத்திற்கான பதில்களில் காண்போம். ஆனால் இப்போது அதனை அவர் குறிப்பிட்டு இருக்கின்றபடியால், அது குறித்து ஒரு சுருக்கமான பதிலைக் காண்போம்.
“மதங்களை விட மாறுபட்ட ஒன்றை கிறிஸ்து என்ற ஒரு சொல் மூலமாக பவுல் அறிமுகப்படுத்தினார்”, என்று செண்பகப் பெருமாள் எழுதுவது அறியாமையின் உச்சக்கட்டம் ஆகும். இந்த சொல்லுக்கு மக்களிடையே பேதங்கள் காட்டக்கூடாது என்ற பொருள் இருந்ததாம். இந்தக் கொள்கை அல்லது இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிதான வார்த்தையாம்.
இவைகள் எல்லாம் படிக்கும்போது, செண்பகப் பெருமாள் அவர்கள் மீது பரிதாபம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இவைகளெல்லாம் அவருடைய சொந்தக் கற்பனைகள், அவர் வேண்டுமென்றே சொல்லும் பொய்கள்.
எபிரேய மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் வித்தியாசம் தெரியாத நபராக செண்பகப் பெருமாள் காணப்படுகிறார். எபிரேய மொழியில் “மேசியா” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் “கிறிஸ்து” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை அறிவு இல்லாத இவர் எப்படி இப்படிப்பட்ட விமர்சனங்களை முன் வைக்கிறார் என்று தெரியவில்லை.
மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தைக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். இயேசுவின் காலத்திலேயே இவ்வார்த்தையின் பொருளை பல நூற்றாண்டுகளாக யூதர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் செண்பகப் பெருமாள், தான் கி.மு. காலத்திலேயும் கி.பி. காலத்திலேயும் யூதர்களோடு இருந்தவர் போன்று எழுதிக் கொண்டிருக்கிறார், என்ன ஒரு முட்டாள்தனம்! என்ன ஒரு வஞ்சக மனதைரியம்!
இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது? என்று எழுதிய இந்த வார்த்தைகளில் இருந்தே இவருடைய ஆய்வுகளின் இலட்சனம் வெளிப்பட்டு விட்டது! இயேசு வாழ்ந்த கி.பி. 30க்குள் ஒரு யூதனிடம் சென்று, உனக்கு கிறிஸ்து என்ற வார்த்தை தெரியாது என்று யாராவது சொன்னால், அவன் முகத்தின் மீது அந்த யூதன் உமிழ்வான்.
கிறிஸ்து என்ற வார்த்தை யூதர்களுக்கு புதிதல்ல
இயேசுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “மேசியா” என்ற வார்த்தையும், அதன் கிரேக்க மொழியாக்கமாகிய “கிறிஸ்தோஸ்” என்ற வார்த்தையும் யூதர்களுக்கு அறிமுகம் செய்தாகிவிட்டது. இரண்டாம் சங்கீதத்திலும், ஏசாயா புத்தகத்திலும், தானியேல் புத்தகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. அந்த மொழியாக்கத்தை செப்டாஜிண்ட்(Septuagint) என்று கூறுவார்கள், அதில் மேசியா என்ற வார்த்தை, கிறிஸ்து என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் செண்பகப்பெருமாளின் ஆய்விற்கு மரண அடியாகும்.
கி.மு. 2ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கிரேக்க மொழியாக்கத்திலிருந்து(செப்டாஜிண்ட்டின்) சில உதாரணங்கள்:
ஏசாயா 45:1
தானியேல் 9:26
சங்கீதம் 2:2
விக்கிபீடியா கிறிஸ்தோஸ் கிரேக்க வார்த்தை
மூலம்: Wikipedia – Greek – Christos
கிரேக்க அகராதி
Greek Strong – studybible.info/strongs/G5547
கிறிஸ்து என்ற வார்த்தை இயேசுவிற்கு முன்பு இன்னும் சிலருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யூத மதத் தலைவர்கள், யோவான் ஸ்நானகனிடம் வந்து, “நீ மேசியாவா?” என்று கேட்டார்கள் அதாவது “நீ கிறிஸ்துவா?” என்று கேள்வி கேட்டார்கள். இதன்படி பார்த்தால் மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தை, யூதர்கள் நன்கு அறிந்த வார்த்தையாகும். செண்பகப் பெருமாள் சொல்வதெல்லாம் சுத்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஆகும்.
இன்னொரு கேள்வி: கிறிஸ்து என்ற வார்த்தை மதம் சாராத வார்த்தை என்று உங்களுக்கு சொன்னவர் யார்? எப்படி இதனை அறிந்துக்கொண்டீர்கள்?
“கிறிஸ்து” என்ற வார்த்தையை பவுல் தான் அறிமுகம் செய்தார், இது அதற்கு முன்பு யூதர்கள் அறியாத வார்த்தை என்று செண்பகப்பெருமாள் சொல்வது, படித்தறிந்த அறிஞர்களை ஏமாற்ற முயலும் செயலாகும் என்பதை வாசகர்கள் அறியவேண்டும். இந்திய மக்களின் காதுகளில் பூ வைக்க செண்பகப்பெருமாள் போன்று அனேகர் கிளம்பி இருக்கிறார்கள்.
3) கிறிஸ்து என்ற வார்த்தை மொழியாக்கங்களில் மேலதிகமாக சேர்க்கப்பட்டதா?
பைபிள் மொழியாக்கம் செய்தவர்கள் கிறிஸ்து என்ற வார்த்தையை மேலதிகமாக சேர்த்தார்கள் என்று செண்பகப்பெருமாள் குற்றம் சாட்டுகின்றார்.
செண்பகப்பெருமாள் எழுதியவைகள்: • பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள். • இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்டமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டது
இவர் எவ்வளவு பெரிய வஞ்சகர் என்பதை துள்ளியமாக உணர்த்தும் விவரம் இது. அதாவது, புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்து மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்பவர்கள் மீது இந்த குற்றச்சாட்டை சொல்பவராகிய இவர் என்ன செய்திருக்கவேண்டும்?
தன் குற்றச்சாட்டை நிருபிக்கும் வண்ணமாக இவர் கீழ்கண்ட ஆதாரங்களை முன் வைத்திருக்கவேண்டும்:
1) கிரேக்க மூல வசனங்களில் எங்கேயெல்லாம் “இயேசு” என்று மட்டும் வருகிறது என்பதை பட்டியலிடவேண்டும். 2) அடுத்த படியாக, எந்தெந்த மொழியாக்கங்களில் “கிறிஸ்து” என்ற வார்த்தை “இயேசு” என்ற வார்த்தையோடு தேவையில்லாமல், மொழியாக்கம் செய்தவர்கள் சேர்த்துள்ளார்கள் என்று பட்டியலிடவேண்டும்.
இவ்விரண்டையும் செண்பகபெருமாள் செய்யவில்லை.
இவர் தம்முடைய புத்தகத்தில் எந்த ஒரு இடத்திலும், மேற்கண்ட ஆதாரங்களை கொடுக்கவில்லை. ஒரே ஒரு வசனத்தை கூட இதற்காக இவர் மூல மொழியோடு சேர்த்து ஆதாரம் காட்டவில்லை. திரு செண்பகப்பெருமாள் அவர்களே, உங்கள் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கப்படுகிறது. இனியும் இப்படி ஆதாரமற்ற விவரங்களைச் சொல்லி பைபிளை குற்றப்படுத்த முயன்றால், அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க, கிறிஸ்தவர்கள் பாமர மக்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். (2007ம் ஆண்டிலிருந்து தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் இஸ்லாமியர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை தமிழ் நாட்டின் புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்களை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள், அப்போது உங்களுக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் பதில் சொல்லும் பாணியும், திறமையும் உங்களுக்கு புரியும்).
செண்பகபெருமாள் கேள்வி எழுப்பிய “கொலோசேயர் 1:25-27 & ரோமர் 1:2-5” வசனங்களுக்கு அடுத்தடுத்த பதில்களில் தேவையான இடத்தில் பதில்களைப் பார்ப்போம்.
முடிவுரை:
இதுவரை, செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதிய புத்தகத்தின் முகவுரையின் சில பத்திகளுக்கு (2-5) பதில்களைக் கண்டோம். திரு செண்பகப்பெருமாள் ஒரு பொய்யார், மக்களை தன் வஞ்சகமான வார்த்தைகளால் ஏமாற்ற முயலும் ஒரு கள்ள உபதேசம் செய்பவர். “மதம் சாரா ஆன்மீகம்” என்ற பெயரில் கிறிஸ்தவத்தை குற்றப்படுத்த முயலும் ஒரு குழப்பவாதி. இவரது குற்றச்சாட்டுகளில் நேர்மையில்லை, இவர் ஒரு அரைகுறை ஆய்வாளர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இவரது பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களைச் சொல்வது ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய கடமையாக உள்ளது.
நம்முடைய அடுத்த பதிலில், செண்பகப்பெருமாள் அவர்களுக்கு ஒரு ஆங்கில பத்தியை கூட சரியாக படித்து புரிந்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவு இல்லை என்பதை நிருபிக்கப்போகிறோம்.
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கு மகிமையாக இத்தொடர் பதில்கள் அமையவும், மக்களின் அறியாமை அகலவும், செண்பகப்பெருமாள் போன்றவர்களின் வஞ்சக வலையில் மக்கள் விழாமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். சத்தியம் ஜெயிக்கும், பொய்கள் அழிந்துப்போகும்.
“செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்” – தொடர் பதில்கள் உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments