top of page

ம(னி)த நல்லிணக்கம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் மாற்று மத மக்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கலாமா



மதநல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கு, மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ போதகர்கள் தங்கள் திருச்சபையை மாற்று மத அன்பர்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள அனுமதிக்கிறார்கள். முக்கியமாக, முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தொழுது கொள்வதற்கு தங்கள் திருச்சபையை சில மணி நேரங்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். இது சரியான செயலா? அல்லது பரிசுத்த வேதாகமத்தின் படி இது அனுமதிக்கப்படாத செயலா?


இதைப்பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக “கேள்வி பதில்” வடிவில் காண்போம்.


கேள்வி 1: 


உன் அயலானை நேசி என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். மத நல்லிணக்கத்திற்காக, என் சபையை முஸ்லிம்கள் தங்கள் இறைவனை தொழுது கொள்ள நான் ஏன் அனுமதிக்கக் கூடாது?


பதில் 1: 


இது மத நல்லிணக்கமில்லை, இது அறியாமை ஆகும்.  இயேசு மத நல்லிணக்கத்தை பேணும் படி சொல்லவில்லை, அவர் மனித நல்லிணக்கத்தை பேணும்படி கட்டளையிட்டார். நம் அயலானை நாம் நேசிப்பதற்கும், அந்த அயலான் வணங்கும் தெய்வத்தை அவன் தொழுதுக்கொள்ள நம் திருச்சபையில் இடமளிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.


கிறிஸ்த சபையில் மாற்றுமத அன்பர்கள் தங்கள் வணக்க வழிபாடு செய்ய அனுமதிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இயேசு தன் சுய இரத்தம் சிந்தி சம்பாதித்த திருச்சபையில், அந்நிய தெய்வங்களை வணங்க இடம் தருவது, இயேசுவை அவமானப்படுத்துவதற்கு சமம், மற்றும் இயேசுவிற்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.


கேள்வி 2:

உன்னைப்போல உன் அயலானை நேசி என்று இயேசு கூறினாரே, இதன் அர்த்தமென்ன? நாம் மாற்றுமத நண்பர்களை அதாவது முஸ்லிம்களை, இந்துக்களை நேசிக்கக்கூடாதா?


பதில் 2: 


உன் அயலானை நேசி என்று இயேசு சொன்னது, உன் அயலகத்தாராகிய முஸ்லிம்கள், இந்துக்கள் பசியாக இருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள். அவர்கள் வியாதியாக இருந்தால், அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, உதவி புரியுங்கள். அவர்களுக்கு உடை தேவையென்றால் அதனை கொடுத்து உதவுங்கள் என்று பொருள். இப்படி நம் அயலானை நேசிப்பதைத்தான் இயேசு கூறினாரே தவிர,  அவனுடைய மதத்தை நேசிப்பதைப் பற்றி இயேசு கூறவில்லை. 

எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவம் ஏற்பதில்லை. அதற்கு பதிலாக, எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி அவருக்கு உதவி புரிவதை ஊக்குவிக்கிறது.


கேள்வி 3:

இயற்கை சீற்றங்களின் காலங்களில் மாற்றுமத அன்பர்களுக்கு என் திருச்சபையை திறந்து அவர்கள் தங்க இடம் தரலாமா?


பதில் 3:

இயற்கை சீற்றங்களாகிய மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் நம் திருச்சபைகளை மற்ற மக்களுக்காக கட்டாயமாக திறந்து கொடுக்கவேண்டும்.


மனிதன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனுக்கு ஆபத்து என்றால், உதவி என்று ஒன்று தேவைப்பட்டால், அதற்காக உங்கள் திருச்சபையை திறந்து கொடுங்கள், அங்கே அவர்கள் தங்கட்டும். மருத்துவ உதவியும் தேவைப்பட்டால் செய்யுங்கள். 


அவனுக்கு பசியென்றால் உணவு வழங்குங்கள். நீங்கள் இரண்டு வேளை பட்டினியாக இருக்கநேரிட்டாலும், அவன் பசியை போக்குங்கள், இது தான் இயேசு காட்டிய வழி.


அவனுக்கு உடுக்க உடை இல்லையென்றால், உங்களிடம் இருப்பதை கொடுங்கள். இயேசுவின் கட்டளையின் படி, நம்மிடம் இரண்டே உடைகள் இருந்தாலும், அதில் ஒன்றை இல்லாதவருக்கு கொடுக்கவேண்டும், அதாவது நம்மிடம் உள்ள உடைகளில் 50% ஐ கொடுக்கும் படி இயேசு கட்டளையிட்டார்.


சுருக்கமாக சொல்வதென்றால், நம் அயலான் தேவையில் இருந்தால், அவனுக்கு இருக்க இடமும், உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை, முக்கியமாக திருச்சபையை நடத்தும் போதகருக்கு அதிகபடியான கடமையுள்ளது.


கேள்வி 4:

தேவையில் உள்ளவன் தங்குவதற்கு திருச்சபையை திறந்துக்கொடுத்து உதவிய நாம், ஏன் வெள்ளிக்கிழமை அன்று தன் இறைவனை அவன் தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது?


பதில் 4:

இந்த இடத்தில் தான் கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக முறை தவறு செய்கிறோம். மனிதனை நேசிப்பது பற்றி தான் நான் மேலே குறிப்பிட்டேன், மதத்தை நேசிப்பது பற்றியல்ல.


உன்னைப்போல் உன் அயலானை நேசி என்று இயேசு சொன்ன இரண்டாவது கட்டளையை நாம் பின்பற்றுவதற்கு முன்பாக, இயேசுவின் முதலாம் கட்டளையை பின்பற்றவேண்டும்.


மத்தேயு 22; 37-40



37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 


38. இது முதலாம் பிரதான கற்பனை.


39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.


40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.


தேவையில் உள்ள மனிதனுக்காக உங்கள் சபையை திறந்து கொடுங்கள், தவறில்லை. தேவைப்பட்டால் அந்த  மனிதனின் உயிரைக் காக்க, தேவாலயத்தின் காணிக்கை பெட்டியில் விழும் அனைத்து காணிக்கையையும் செலவழியுங்கள் (பல ஆயிரங்கள், இலட்சங்கள் கூட இருக்கலாம்), இதுவும் தவறில்லை. ஆனால், பரிசுத்த தேவனை தொழுதுக்கொள்ளும் ஆலயத்தில், பொய்யான தெய்வங்களை தொழுதுக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டாம், இது வேதத்தின்படி தவறு, கர்த்தரை மறுதலிக்கும் செயல் ஆகும்.


உங்களுக்கு இன்னும் புரியவில்லையென்றால், இதை கவனியுங்கள்.  ஒரு உதவியற்ற‌ முஸ்லிமின் உயிரைக் காக்க திருச்சபையை அடமானம் வைத்து, அல்லது விற்றுவிட்டு கூட நீங்கள் உதவுங்கள். ஆனால், அந்த சபையில் அவன் தன் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கும் முட்டாள்தனத்தைச் செய்யாதிருங்கள்.  


தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளை: 


யாத்திராகமம் 20: 3-4


3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.


4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;


எனவே, அந்நிய தெய்வங்களை தொழுதுக்கொள்ள நம் திருச்சபையை கொடுக்கக்கூடாது. இது கொஞ்சம் கடினமான உபதேசம் தான், ஆனால் வேறு வழியில்லை, சத்தியத்தை சொல்லாமல் இருக்கக்கூடாதே.


இதுவரையில் சொல்லப்பட்டவைகளை கவனித்தால், மனித நல்லிணக்கத்தை பேணும்படி பைபிள் சொல்வதை கவனிக்கமுடியும், மதநல்லிணக்கத்தை அல்ல.


கேள்வி 5:

ஒருவேளை நம் சபையை முஸ்லிம்களுக்கு தொழுகைக்காக திறந்துவிட்டால் என்ன தீமை உண்டாகிவிடும்?


பதில் 5:

நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (II கொரிந்தியர் 6:14). 


ஒரு கிறிஸ்தவ சபை போதகர் தன் சபையை மாற்று மத ஆராதனைகளுக்கு திறந்து கொடுக்கும் போது, அவர்:


1) அந்த அந்நிய மதம் கூட, கிறிஸ்தவம் போன்ற ஒரு மார்க்கம் தான் என்று ஒப்புக்கொள்கிறார் என்று அர்த்தம்.


2) தன் சபை விசுவாசிகள் தவறுவதற்கும், குழம்புவதற்கும் அவர் காரணமாக ஆகிவிடுகிறார்.


3) தேவன் தம் விரல்களால் எழுதிக்கொடுத்த 10 கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று பொருள்.


4) இயேசு கட்டளையிட்ட இரண்டு கட்டளைகளில் முதலாவது கட்டளையை மீறுகிறார் என்று அர்த்தம்.


5) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்லியிருக்கும் போது, வேறு ஒரு வழியும் உண்டு என்றுச் சொல்லி, இயேசுவிற்கு எதிராக செயல்பட்டதற்கு சமமான செயலாகும்.


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.


மனிதனின் மதத்தைப் பார்க்காமல், மனித நல்லிணக்கத்தை பேணவே பைபிள் நமக்கு கட்டளையிடுகிறதே தவிர, 'மத நல்லிணக்கத்தைப் போண' அல்ல.


கேள்வி 6: 

முன்னால்  ரோமன் கத்தோலிக்க போப் (John Pope II) அவர்கள், குர்‍ஆனுக்கு முத்தமிட்டுள்ளாரே, அவர் செய்தது தவறா?


பதில் 6:

இதற்கான முதலாவது பதில், “அவர் செய்தது நிச்சயமாக 100% தவறு, இதில் மாற்று கருத்தில்லை” என்பதாகும்.


இரண்டாவதாக, அவர் இஸ்லாமிய நாடாகிய ஈராக்கிற்கு சென்றிருந்தபோது, அவருக்கு மதிப்பினிமித்தம் கொடுக்கப்பட்ட குர்‍ஆனை அவர் பெற்றுக்கொண்டார். குர்‍ஆனுக்கு முன்பாக குனிந்தும், அதை வாங்கிய பிறகு முத்தமும் கொடுத்தார். 


  1. குர்‍ஆன் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று அவருக்குத்தெரியுமா?

  2. குர்‍ஆன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ கோட்பாட்டை மறுக்கிறது என்பதை அவர் அறிவாரா?

  3. இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது, இதனை போப் ஏற்பாரா?

  4. இயேசு உயிர்த்தெழவில்லை என்றும் குர்‍ஆன் சொல்கிறது, அப்படியானால், போப் இதனை அங்கீகரிப்பாரா?

  5. “என்னைத்தவிர பிதாவினிடத்தில் யாரும் போகமுடியாது” என்று இயேசு சொல்லியுள்ளாரே, இதனை அறிந்தும் போப் அவர்கள், “பிதாவினிடத்தில் சேருவதற்கு முஹம்மதுவும் ஒரு வழி” என்று உலகிற்கு சொல்லவருகின்றாரா?


போப் அவர்கள் ஓரு மரியாதைக்காகத்தான் அப்படி குர்‍ஆனுக்கு முத்தமிட்டார் என்றுச் சொன்னால், மரியாதைக்காக கைகளில் அதனை பெற்றுக்கொண்டால் போதாதா? ஒரு மார்க்கத்தின் தலைவர் இப்படிப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


ஒருவேளை குர்‍ஆனில் மேற்கண்ட போதனைகள் உள்ளன என்பதை போப் அறியாமல் இருந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டால், “ஆம், இருக்கலாம், அவருக்கு குர்‍ஆன் பற்றிய அடிப்படைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்”.


ஒருவேளை, “ஈராக்கில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக அவர் அப்படி செயல்பட்டு இருந்திருக்கலாம் அல்லவா” என்று கேட்டால், “ஆம் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”.  உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை ஈராக்கின் கிறிஸ்தவர்கள், போப்பின் குர்‍ஆன் முத்தத்திற்காக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பது மிகவும் முக்கியமான கேள்வி.

கேள்வி 7:

சில திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக பகவத் கீதை மற்றும் குர்‍ஆன் போன்ற புத்தகங்களில் சில வசனங்கள் படிக்கப்பட்டதாக கேள்விப்படுகிறோமே! இவைகள் சரியான செயல்களா?


பதில் 7:

இவைகள் எப்படி சரியான செயல்களாக இருக்கமுடியும்?


கிறிஸ்தவ திருச்சபைகளில் மதநல்லிணக்கத்திற்காக  குர்‍ஆனை படிக்கவைப்பது, பகவத்கீதையை படிக்கவைப்பதெல்லாம், தவறான செயல்கள், அறியாமையின் உச்சக்கட்டங்கள். இப்படிப்பட்ட திருச்சபை போதகர்களுக்கு  பைபிளும் தெரியாது, குர்‍ஆனும் தெரியாது, பகவத் கீதையும் தெரியாது.


மனிதனை நேசி என்றுச் சொன்னால், அவன் மார்க்கத்தை ஏன் நேசிக்கிறீர்கள்?


முடிவுரை:


கிறிஸ்தவ ஊழியர் ரவி ஜகரியா அவர்கள் மிகவும் தெளிவாக இப்படி கூறுவார்: “மேலோட்டமாக பார்க்கும் போது, அனைத்து மதங்களும் ஒன்று போலவே தென்படும், ஆனால் அடிப்படை கோட்பாடுகளில் அவைகள் வித்தியாசமானவைகள், அவைகள் சமம் அல்ல”.


பகவத் கீதையில் கிருஷ்ணன், நான் தான் இறைவன், என்னால் அனைத்தும் படைக்கப்பட்டது என்று சொல்லும் போதே, அவர் மற்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்கிறார் என்று அர்த்தம்.


லாயிலாஹ இல்லல்லாஹ் என்று குர்‍ஆன் சொல்லும் போதே, அதாவது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று குர்‍ஆன் சொல்லும் போதே, மற்ற மார்க்கங்களை அது புறக்கணிக்கிறது என்று அர்த்தமாகின்றதல்லவா? இதுகூடவா நமக்கு புரியாது?


நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று இயேசு சொன்னபோதே, அவர் மற்ற மார்க்கங்களை புறக்கணிக்கிறார் என்று புரிகின்றதல்லவா?


உண்மை இப்படி இருக்க, ஒரு மார்க்கத்தை புறக்கணித்த‌ வேதத்தை கொண்டு வந்து இன்னொரு மார்க்க ஆலயத்தில் வாசித்தால், என்ன அர்த்தம்? யாருடைய காதில் பூவைக்க பார்க்கிறார்கள் இவர்கள்?


மத நல்லிணக்கம் நமக்கு தேவையில்லை, மனித நல்லிணக்கம் தான் தேவை.


நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன் என்றுச் சொல்லி, அவன் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள உன் திருச்சபையை திறந்து நீ கொடுத்தால், நீ கிறிஸ்தவனில்லை, நீ இயேசுவின் சீடனில்லை. 


தேவைப்பட்டால், அந்த முஸ்லிமின் உயிரைக் காக்க அவனது அறுவை சிகிச்சைக்காக‌, உன் திருச்சபையை விற்று அவனுக்கு உதவி புரி. இயேசு உன் செயலைக் கண்டு மகிழ்வார். அவரது இரண்டாம் வருகையில் உங்களைப் பார்த்து, நான் வியாதியாய் இருந்தேன் என்னை பார்க்கவந்தீர்கள், உதவி செய்தீர்கள் என்று கூறி உங்களை மெச்சிக்கொள்வார். நான் எப்போது உங்களுக்கு உதவி செய்தேன் என்று  நீங்கள் கேட்கும் போது, நீ அந்த முஸ்லிம் சகோதரனுக்குச் செய்தது எனக்கு செய்தது தான் என்று சொல்லுவார்.


கிறிஸ்தவ ஊழியர்களே! போதகர்களே! நன்றாக கவனியுங்கள், மனிதனுக்குச் செய்யும் உதவிக்கும், மத நல்லிணக்கம் என்றுச் சொல்லி செய்யும் உதவிக்கும் இடையே இமாலய அளவு வித்தியாசம் உள்ளது. இதனை புரிந்துக்கொண்டால் தான் நீங்கள் இயேசுவிற்காக உண்மையான ஊழியராக சேவை செய்யமுடியும்.

Date: 1st July 2019

 
3 views0 comments

Kommentare


bottom of page