top of page

ரமலான் சிந்தனைகள் – 13: ஈஸா அல்-மஸிஹ் – பெயரில் மட்டுமே மேசியா?



குர்-ஆனில் தனியாகவோ அல்லது வேறு சிறப்புப் பெயர்களுடன் சேர்ந்தோ (உதாரணமாக, மர்யமின் மகன்) மொத்தத்தில் 11 முறை ஈஸாவுக்கு  “அல்-மஸிஹ்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஈஸாவின் பிறப்பு துவங்கி எல்லா காலங்களிலும் இப்பதம் குர்-ஆனைப் பயன்படுத்தப்படிருக்கிறதைக் காணலாம். குர்-ஆனில் ஈஸாவைத் தவிர வேறு எந்த தீர்க்கதரிசிக்கும் “அல்-மஸிஹ்” என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. ஆயினும், குர்-ஆனைப் பொறுத்தவரையில் அல்-மஸிஹ் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. ஆகவே, அனேக முஸ்லீம் அறிஞர்கள் மஸிஹ் என்றால் என்ன என்பதை இஸ்லாமின் மொழியில், அதாவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப விளக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். “அல்-மஸிஹ்” என்பதற்கு பொருள் காண முயன்ற அரபி மொழி அறிஞர்கள், அது வெறும் பட்டப்பெயர் (laqab, nickname)மட்டுமே என்று சொல்கிறார்கள்.  குர்-ஆன் 4:171 மற்றும் 5:75ன் படி, ஈஸா அல்-மஸிஹ் அவர்கள் அல்லாஹ்வின் வெறும் தூதர் மட்டுமே. மேலும், ஈஸாவை அல்லாஹ் என்று கூறுகிறவர்கள் (ஈஸாவை இறைவன் என்று கூறுகிறவர்கள்) இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) என்றும் குர்-ஆன் 5:17, 72 கூறுகிறது. குர்-ஆனில் வரும் ஈஸா தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் (தன்னையும்) வணங்கச் சொல்லவில்லை என்று அறிக்கை செய்வதாக குர்-ஆன் 5:116ல் வாசிக்கலாம்.  ஆகவே ஈஸா அல்-மஸிஹ் என்று வாசிக்கும், சொல்லும் முஸ்லீம்களுக்கு அதன் பொருள் என்ன என்று தெரிவதில்லை.


இதை வாசிக்கையில், “அல்-மஸிஹ்” என்பது ஈஸாவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சிறப்புப் பதமாக குர்-ஆனில் இருந்தாலும், அதற்கு சிறப்புக் காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எபிரேய மொழியின் “மேசியா” என்ற வார்த்தையில் இருந்துதான் அல்-மஸிஹ் வந்திருக்கும் என்பது வெளிப்படையாக இருந்தாலும், மேசியா என்பதன் பொருளை ஒருவேளை முஹம்மது அறிந்திருந்தால், குர்-ஆனில் இப்பதம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்புமுதலே “கிறிஸ்து” (மேசியா என்பதைக் குறிக்கும் கிரேக்க மொழி வார்த்தை) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இயேசு தன்னைப் பற்றி குறிப்பிடும்போது யூதர்களுக்குப் நன்கு புரியும் வேறு வார்த்தையையே பயன்படுத்தினார். ஆனாலும், தம் சீடர்களிடம், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்” என்று இயேசு கேட்டபோது, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு சொன்னவுடனே இயேசு சொன்னது என்னவெனில், ” மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு 16:15-17). இயேசுவைப் பற்றிய சரியான புரிதல் அனைவருக்கும் உண்டாக ஜெபிப்போம்.


இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், அப்போஸ்தலர்கள் தைரியமாக இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்து அனேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார்கள் என்று அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதுமுதல், கிறிஸ்தவ மார்க்கமானது யூதேயாவுக்கு வெளியே, யூதரல்லாத மற்றவர்கள் மத்தியில் அதிகமதிகமாக பெருமளவில் பரவி இருப்பதால், “கிறிஸ்து” என்பதன் பொருளை ஒருவர் விளக்கிச் சொன்னாலொழிய அதைக் கேட்பவர்  “கிறிஸ்து யார்?” என்று புரிந்து கொள்ள முடியாது.  ஏனெனில் அவர்களுடைய மொழியில் அது வெறும் பெயராக மட்டுமே புரிந்துகொள்ளப்படக் கூடும். வேதாகமம் கூறும் இயேசுவை நம்புவதற்கு, குர்-ஆன் கூறும் அல்-மஸிஹ் தடையாக இராமல், இயேசுவே உண்மையான விடுதலையை தரும் கிறிஸ்து என்பதை விளக்கிச் சொல்ல கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவும்,  இயேசு கிறிஸ்துவை  முஸ்லீம்கள் கண்டுகொள்ள அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்படவும் ஜெபிப்போம்.



– அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 6th May 2020


 


0 views0 comments

Comments


bottom of page