ரமலான் சிந்தனைகள் – 16: ஈஸாவின் வாழ்க்கையும், வார்த்தைகளும் (2)
ஈஸாவின் வாழ்க்கை மற்றும் அவர் செய்த போதனைகள் பற்றி அறிந்து கொள்ளும்படி குர்-ஆன் மிக மிகக் குறைவாக, சொல்லப்போனால் எந்த விவரங்களையும் தரவில்லை என்று நேற்று பார்த்தோம். ஈஸா அனேக அற்புதங்களைச் செய்தார் என்று குர்-ஆன் திரும்பத் திரும்ப கூறினாலும், அவர் செய்த ஒரே ஒரு அற்புத சம்பவத்தை மட்டுமே குர்-ஆன் விவரிக்கிறது. அது அவர் தன் தாயாருக்கு ஆதரவாக தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசியது ஆகும் (குர்-ஆன் 19:30-33). இக்கதை தள்ளுபடியாகமங்களில் ஒன்றான இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்லும் யாக்கோபின் நற்செய்தி நூலில் (Infancy Gospel of James) உள்ளதை பிரதிபலிப்பதாக இருக்கிறது. களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைச் செய்து, அதில் ஊதி உயிர்கொடுத்ததாக சொல்லப்படும் அற்புதம் பற்றி குர்-ஆன் 3:49; 5:110 ல் வாசிக்கிறோம். இறைவன் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கியதற்கு ஒத்ததாக இக்கதை இருந்தாலும், இரண்டு விஷயங்களை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஈஸா அவர்கள் (குழந்தையாயிருந்த போது) இன்ன விதமாக செய்வேன் என்று சொல்வதை 3:49ல் வாசிக்கிறோம். 5:110 ல் ஈஸா செய்ததாக அல்லாஹ் சொல்வதாக வருகிறது. எப்போது, எப்படி, யார் மத்தியில் அந்த அற்புதம் நடந்தது போன்ற விவரங்கள் குர்-ஆனில் இல்லை. மேலும், இக்கதையானது தள்ளுபடியாகமங்களில் ஒன்றான இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்லும் தாமஸ் எழுதிய நற்செய்தி நூலில் (Infancy Gospel of Thomas) உள்ள விவரங்களுக்கு ஒத்ததாக இது இருக்கிறது. இதே போல, பிறவிக்குருடர்களை குணமாக்குவேன், குஷ்டரோகிகளை குணமாக்குவேன் என்று ஈஸா சொல்வதாக குர்-ஆன் 3:49 லும், ஈஸா அப்படி செய்ததாக அல்லாஹ் சொல்வதாக குர்-ஆன் 5:110 லும் வாசிக்கிறோம், ஆனால் அது பற்றிய விவரங்கள் எதுவும் குர்-ஆனில் இல்லை. வானத்திலிருந்து ஒரு உணவு தட்டு அல்லது உணவுகளடங்கிய மேஜையைப் பற்றிய அற்புதம் பற்றி குர்-ஆன் 5:112-115ல் வாசிக்கிறோம். சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உணவுத் தட்டு அல்லது மேஜை (māidatan) ஐ தரும்படி ஈஸா அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டதாகவும், அல்லாஹ் தருவேன் என்று சொல்வதையும் நாம் குர்-ஆனில் வாசிக்கிறோம். ஆனால், அது நடந்ததா, இல்லையா என்ற விவரம் குர்-ஆனில் இல்லை. குர்-ஆனில் இயேசுவின் அற்புதங்கள் பற்றியவை எதுவும் பரிசுத்த வேதாகமம் கூறும் நற்செய்தி நூல்களுக்கு ஒத்ததாக இல்லாமல், தள்ளுபடியாகமக் கதைகளுக்கு ஒத்ததாக இருப்பது கவனித்தீர்களா! மேலும், ஈஸாவின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் “என் உத்தரவைக் கொண்டு” செய்தவை என அல்லாஹ் சொல்வதன் மூலம் (குர்-ஆன் 5:110), ஈஸா ஒரு சாதாரண மனிதன் மட்டுமே, அற்புதங்கள் செய்யும் சக்தி அவருக்கு இல்லை என்று குர்-ஆன் கூறுகிறது.
ஈஸாவின் வாழ்க்கை, வார்த்தை மற்றும் போதனைகள் பற்றி குர்-ஆன் தரும் விவரங்கள் எதுவும் வேதாகமத்தில் உள்ளவற்றுடன் ஒத்துப் போகவில்லை. ஈஸா பற்றி குர்-ஆன் கூறும் கதைக்கு ஒத்த ஒரே ஒரு கதையை நாம் நற்செய்தி நூலில் காண்கிறோம், அது, யோவான் பிறப்பிற்கு முன் சகரியாவை தேவதூதன் சந்தித்ததும், இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு தேவதூதன் அறிவித்ததும் ஆகும். ஆனால் இவை இயேசுவின் பிறப்பு தவிர வேறு எதையும் பற்றி எதுவும் கூறவில்லை. ஈஸாவை அற்புதங்கள் செய்தவராகக் கூறும் குர்-ஆன், முஹம்மதுவை அற்புதம் செய்பவராகக் காட்டவில்லை. முஹம்மது செய்த ஒரே அற்புதம் குர்-ஆன் தான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஈஸாவைப் பற்றி உயர்வாக குர்-ஆன் சொன்னாலும், நற்செய்தி நூல்களில் இல்லாத, தள்ளுபடியாகமச் சம்பவங்களை மட்டுமே கவனமாக பயன்படுத்தி இருப்பதன் மூலம், குர்-ஆன் 5:110ல் நாம் காண்பது போல, இஸ்லாம் கூறும் செய்திக்கு வசதியாக, மற்றவர்களில் ஒருவர் என்று துணை கதாபாத்திரமாக அவரைக் காண்பித்து, ஈஸாவின் எல்லையை வரையறுத்து, வெறும் மனிதனாக மட்டுமே காண்பித்து இருப்பதை அறியலாம்.
நற்செய்தி நூல்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டும் அல்ல, அவருடைய ஊழிய துவக்க முதலாய் நடந்த பல காரியங்கள், அருளுரைகள், உவமைகள், உரையாடல்கள், அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள், பாடு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் என அனேகக் காரியங்களைப் பற்றி அவைகளைக் கண்ட, கேட்ட நேரடி சாட்சிகள் எழுதியவைகளை நாம் காண்கிறோம். அவை இயேசு இயேசுவின் வாழ்க்கை, போதனை, மற்றும் இயேசு மற்ற மனிதர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று காண்பிப்பதுடன், இயேசுவின் வாழ்க்கைக்கும் அவருடைய போதனைக்கும் மற்றும் தேவனுக்கும் அவருக்கும் இருந்த நெருக்கத்தையும் காண்பிக்கின்றன. குர்-ஆன் கூறும் ஈஸாவைப் போலல்லாது, இயேசு அதிகாரமுடையவராய் போதித்தார், அந்த அதிகாரத்தை தன் சீடர்களுக்குக் கொடுத்தனுப்பினார். பரிசுத்த வேதாகமம் கூறும் இயேசு மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தை உண்டாக்கினார், இன்றும் அம்மாற்றத்தை செய்து வருகிறார். பாவிகளின் சினேகிதர் என்று அழைக்கப்பட்ட இயேசு, இன்றும் மக்கள் தன்னிடம் வந்து இரட்சிப்படையவும், இலவசமாய் சமாதானமான வாழ்வைப் பெற்று தேவனுடன் தன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார். அவருடைய அழைப்பை இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு அறிவிக்கும் பணி எவ்வளவு மகத்தானது!
முஸ்லீம் நாடுகளிலும், முஸ்லீம்கள் மத்தியிலும் இயேசுவை அறிவிக்கும் கிறிஸ்தவர்கள் வேதம் கூறும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சமரசமின்றி பகிர்ந்து கொள்ளவும், இயேசுவைப் பற்றி அவரை அறியாதவர்கள் மத்தியில் அறிவிக்க அர்ப்பணிப்புள்ள அனேக வேலையாட்கள் எழும்பவும் (மத்தேயு 9:38, லூக்கா 10:2), இஸ்லாமியர் அனைவரும் இயேசுவைக் காணவும் நாம் ஜெபிப்போம்.
இயேசுவே, உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே;
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே!
– அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 9th May 2020
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments