ரமலான் சிந்தனைகள் 18: இஸ்லாமிய திரித்துவம் – அல்லாஹ், ஈஸா மற்றும் மர்யம்!
ஈஸாவை அல்லாஹ் என்று கூறுகிறவர்கள் இறைமறுப்பாளர்கள் என்று குர்-ஆன் 5:17, 72 கூறுவதாக முன்பு பார்த்தோம். அது போல, கிறிஸ்தவர்கள் ஈஸாவை அல்லாஹ்வின் மகன் என்றும், அல்லாஹ்வுடன், சந்நியாசிகளையும்,பாதிரிகளையும் மற்றும் ஈஸாவையும் தெய்வங்களாக்கிக்கொள்கிறார்கள் என்று குர்-ஆன் 9:30,31 கூறுகிறது. ஈஸா, மற்றா எல்லா நபிகளையும் போல, ஒரு சாதாரண மனிதர் மட்டுமே என்று குர்-ஆன் சொல்வதைப் பல இடங்களில் காணலாம். மேலும் திரித்துவத்திற்கு எதிராக குர்-ஆனில் சில வசனங்களைக் காணலாம். குர்-ஆன் 4:170 ல், மூன்று கடவுள்கள் என்று சொல்லாதிருக்க வேண்டும் என்றும், குர்-ஆன் 5:73ன் படி, “அல்லாஹ் மூவரில் மூன்றாமவன்” என்று சொல்லக் கூடாது என்றும், குர்-ஆன்5: 116ன் படி, “மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ்வே நேரடியாக ஈஸாவிடம் கேட்பதாகப் பார்க்கிறோம். இவ்வசனங்களை வாசிக்கும்போது, இஸ்லாமின் படி திரித்துவம் என்பது, அல்லாஹ், மரியம் மற்றும் அவருடைய மகன் ஈஸா ஆகிய மூன்று பேரை வணங்குவது ஆகும். மேலும், ஈஸாவும், உணவு சாப்பிட்டார், ஆகவே அவர் இறைவன் ஆக முடியாது என்று குர்-ஆன் 5:75ல் வாசிக்கிறோம்.
இதை வாசிக்கும் கிறிஸ்தவர்கள் எவரும் இஸ்லாம் கூறும் திரித்துவமானது கிறிஸ்தவ திரித்துவத்திற்கு முற்றிலும் எதிரானது என்பதையும், மூன்று கடவுள் தத்துவம் கிறிஸ்தவத்தில் கிடையாது என்பதையும் எளிதாகச் சொல்லிவிடுவார்கள். மேலும், இது தவறான உபதேசம் என்று கிறிஸ்தவம் தள்ளிவைத்த சில கள்ள உபதேசக் குழுக்களின் போதனைக்கு ஒத்ததாக இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் “இறைவன் எப்படிப்பட்டவர்?” என்றும் அவர் நமக்கு “யாராக இருக்கிறார்?” என்றும் நாம் தியானிக்கிறோம், பரிசுத்த வேதாகமத்திலும் தேவன் தன்னை அப்படியே வெளிப்படுத்துகிறார். இஸ்லாமிய இறையியலில், “இறைவன் எப்படி எல்லாம் இருக்க மாட்டார்?” (உதாரணமாக, சாப்பிடமாட்டார்) என்று இறைவனைப் பற்றி சிந்திக்கிறார்கள். மேலும், இறைவன் ஒருவன் என்று சொல்லும்போது, ஒன்றே ஒன்று மட்டுமே (absolute one ) என்று சொல்கிறார்கள். இதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. அதைப் பின்பு விளக்குகிறேன். ஆனால், பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை, பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி என தன்னை வெளிப்படுத்துகிற திரித்துவ தேவனை நாம் காண்கிறோம். துவக்கமுதலே வேதாகமத்தின் தேவன் மனிதனோடு கொண்ட உறவையும், மனிதன் தொலைத்த அந்த உறவை மீட்க அவர் காட்டின அன்பையும் காண்கிறோம். “தேவன் ஒருவரே” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கையில் பன்மையில் ஒருமையைக் (Uniplurality) குறிக்கும் வார்த்தை வேதாகமத்தின் மூல மொழியில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். திரித்துவத்தை எளிதில் சொல்ல வேண்டுமானால், மூவரும் வெவ்வேறு தனி நபர்களாக இருந்தாலும், தன்மை அல்லது இயல்பில் ஒருவராக இருக்கிறார்கள். இதெப்படி எனில், நாம் அனைவரும் தனித்தனியே வெவ்வேறு நபர்கள் என்றாலும், மனித தன்மையில் (Human nature & human being) நாமனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
தேவன் எப்படிப் பட்டவர் என்பதையும், மனித மீட்புக்காக தேவன் செய்த அன்பின் செயல் என்ன என்பதையும் முஸ்லீம்கள் அறிந்து உணர்ந்து கொள்ள ஜெபிப்போம். வேதம் கூறும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்கிற முஸ்லீம்கள் ஒவ்வொருவரும், “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை” (1 யோவான் 4:2), அவரே கர்த்தர் என்று அறிக்கை பண்ணுவதற்கு (1 கொரி.12:3) தேவ ஆவியானவர் அவர்களுக்கு உதவும்படி நாம் ஜெபிப்போம்.
– அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 11th May 2020
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
コメント