top of page

ரமலான் சிந்தனைகள் 19: ஈஸா – பெயரில் என்ன இருக்கிறது?


குர்-ஆனில், ஈஸா (عيسى)என்ற பெயர் 25 முறை வருகிறது. தூதர்கள் மர்யமிடம் வந்த போது,  “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று சொல்லி பிறக்கப் போகிற குழந்தையின் பெயரைச் சொல்வதாக குர்-ஆன் 3:45 கூறுகிறது. ஈஸா என்ற பெயரை குறிப்பிடப்படாமல், வேறொரு இடத்தில் (19:16-21), ஜிப்ரயீல் மட்டும் போய் மர்யத்திடம் சென்று பிறப்பை அறிவிப்பதாக வருகிறது. பெயரிடப்படுவது குறித்தோ அல்லது ஏன் அந்தப் பெயர் என்றோ அங்கு எதுவும் இல்லை.  “ஈஸா” என்ற பெயர் எப்படி குர்-ஆனில் வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் பல விளக்கங்களைக் கூறுகிறார்கள். இயேசு (கிரேக்கப் பெயர் Iesous, லத்தீன் மொழியில் Iesus ) என்பதைக் குறிக்கும் எபிரேயப் பெயர் Yeshua ஆகும். இந்த Yeshua என்ற வார்த்தையில் வரும் மெய்யெழுத்துக்களான y-sh-' என்ற மூன்று எழுத்துக்களையும் நேர்மாறாக பின்னோக்கி (தலைகீழாக) எழுதினால் வருவதுதான் அரபி மொழியில் ஈஸாவைக் குறிக்கும் '-s-y (ي-س-ع ) என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் சொல்வதென்னவெனில்,  ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்தும்படி யூதர்கள் முஹம்மதுவிடம் சொன்னதாகவும், அவர்கள் மேல் உள்ள நல் நம்பிக்கையில் முஹம்மது ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்தினார் என்றும், ஆனால் உண்மையில் அவர்கள் செய்ததென்னெவெனில், முஹம்மது மீது உள்ள வெறுப்பில், அவர் ஏசாவின் ஆவியை உடையவர் என்று சொல்லி  இயேசுவுக்குப் பதிலாக ஏசாவின் பெயரை சொல்லிவிட்டார்கள் என்பதாகும். அரபி மொழியில் ஏசா என்ற பெயர் ஈஸு என்று வருகிறபடியால், குர்-ஆனில் வருகிற (உதாரணமாக, மூஸா) மற்ற பெயர்களுக்கேற்றார்போல ஈஸா என்று வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டில் 'Isaniyya என்ற பெயரில் சீரியா தேசத்தில் இயங்கி வந்த ஒரு துறவிகள் தங்கும் மடம் இருந்ததாகவும், அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. இங்கே குறிப்பிட்டிருக்கிற விளக்கங்கள் எல்லாம் சரி என்று நான் சொல்லவரவில்லை. மாறாக, ஈஸா என்ற பெயர் ஏன் என்பதற்கு ஒரு தெளிவான பதில் காணமுடியாத சூழ்நிலை இருப்பதைச் சுட்டிக் காட்டவே இவைகளை இங்கு குறிப்பிடுகிறேன். அரபி கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூல எபிரேய வார்த்தைக்குப் பொருத்தமான Yasu' (yasua) என்ற பெயரைத்தான் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.  மேலும், முன்பு நாம் பார்த்தது போல, குர்-ஆனில் ஈஸா அவர்களுக்கு எவ்வளவுதான் உயர்வான பட்டங்களையும், நிலையையும் கொடுத்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே என்றும், முஹம்மதுவுக்கு முன்னோடி அல்லது முஹம்மதுவின் வருகையை முன்னறிவித்த அல்லாஹ்வின் அடிமை/இறைதூதர் என்றே குர்-ஆன் கூறுவதையும் பார்க்கிறோம். குர்-ஆனில் வருகிற ஈஸாவைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பவைகள் எதுவும், வேதாகமத்தில் இல்லாதவை, தள்ளுபடியாகமக் கதைகள் என்பதையும் நாம் பார்த்தோம். இப்போது இயேசுவுக்கு வருவோம்.

மத்தேயு, மற்றும் லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் இயேசு பிறப்புச் செய்தியை அறிவித்த தேவதூதன் யோசேப்பு மற்றும் மரியாள் இருவரிடமும் பிறக்கப்போகிற குழந்தைக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று சொல்லி, அதற்கான காரணத்தையும் சொல்வதைக் காண்கிறோம் (மத்தேயு 1:21, லூக்கா 1:31). அது மட்டுமல்ல, இயேசு என்ற பெயரின் மேன்மையையும், இயேசு என்ற பெயரைச் சொன்னால் நடக்கும் அற்புதங்களையும், இயேசுவின் பெயரைச் சொல்லி ஜெபிக்க வேண்டும், கூடி வரவேண்டும் என பல காரியங்களை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இயேசு என்ற பெயரைச் சொல்லும்போது, அந்த பெயரின் பொருள்  “யேகோவா இரட்சிக்கிறார்/உதவுகிறார்” என்று சொல்வதன் நடைமுறை விளக்கத்தை நாம் நம் வாழ்வில் காண்கிறோம்.  இயேசுவின் பெயர், எல்லா பெயர்களைக் காட்டிலும், எல்லாவற்றிலும் மேலான பெயர் என்றும், உலகில் உள்ள மனிதர் அனைவரும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை பண்ணுவதற்காக தேவன் அந்த மேலான நாமத்தைக் கொடுத்தார் என பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 2:11).  “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று யோவான் 1:12ல் வாசிக்கிறோம். இயேசுவைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கடந்த சில நாட்களாக ஈஸாவையும் இயேசுவையும் குறித்து நீங்கள் வாசித்த பதிவுகள் உங்களுக்குள் ஒரு புரிதலைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் குற்றம் சாட்டி, வாக்குவாதம் செய்ய வேண்டிய நேரமல்ல இது (இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்). இவைகளைப் பற்றி ஆண்டவராகிய இயேசு முன்னமே நமக்குச் சொல்லிவிட்டார். நாம் சிந்தித்து வேண்டிய விஷயம் ஒன்று உண்டெனில், நீங்களும் நானும் இணைந்திருக்கிற தேவனுடைய குடும்பத்தில் சேராமல் அனேகர் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? சிந்திப்போம் செயல்படுவோம்!

இயேசுவை அறியாத பல கோடி ஜனங்களில், முஸ்லீம்களே மிகப் பெரிய ஜனக்கூட்டமாக இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை அறிந்து கொள்ள, இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை பண்ண நாம் ஜெபிப்போம். இதில் நம் பங்கு என்ன என்று ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்தவும் அவரிடம் கேட்போம்.

– அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 12th May 2020

 
0 views0 comments

Comments


bottom of page