லூசிபர் என்றால் யார்? இயேசுவும் அல்லாஹ்வும் லூசிபரா?
(ஈமெயில் உரையாடல்கள்)
எனக்கு கீழ்கண்ட ஒரு கேள்வி வந்தது, அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.
From: Kxxxxxxxxx@gmail.com
Date: Nov 2, 2018, 7:53 AM
Subject: லூசிபர்
Praise the lord,
Dear Beloved Brother’s,
இதற்கு சரியான விளக்கம் தேவைப்படுகிறது
ஒரு இஸ்லாமியரின் கேள்வி பதில் இது:
லூசிபர் என்றால் அனைருக்கும் சாத்தான் தான் நியாபகம் வரும்.உண்மையில் அது என்ன? சாத்தானா என்று பார்த்தால் அது இல்லை. அது ஒரு புனைவு பெயர். சரி இதை விடுவோம், விவிலியத்தின் அடிப்படையில் இது என்ன என்பதை காண்போம். பைபிளில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி தள்ளப்பட்ட தூதன் என்பவன் லூசிபர். லூசிபர் என்பதற்கு சரியான அர்த்தம் *விடிவெள்ளி நட்ச்சத்திரம்* மற்றும் இந்த வார்த்தை எபிரேய மொழியில் helel (or heylel) என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டது.
பைபிளில் சாத்தான் என சொல்லப்படும் லூசிபர் மட்டும் தான் லூசிபரா என்று பார்த்தால் இல்லை . ஏசுவும் ஒரு லூசிபர் தான். ஆம் லூசிபர் என்றால் விடிவெள்ளி நட்சத்திரம். *ஏசுவும் தான் ஒரு விடிவெள்ளி நட்சத்திரம்* என்று கூறுகிறார்.
*வெளிபடுத்துதல் 22.16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.*
Kxxxxxxxxxx
கர்த்தருக்குள் பிரியமான சகோதரருக்கு,
எங்களிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டதற்காக மிக்க நன்றி. இப்போது அதற்கான பதிலை காண்போம்.
இந்த கேள்வியை ஒரு முஸ்லிம் கேட்டதாக எழுதி இருந்தீர்கள். ஆனால் இவைகள் நாத்திகர்களால் எழுப்பப்படும் கேள்விகள் ஆகும். அவைகளை படித்து தான் முஸ்லிம் நண்பர் இக்கேள்வியைக் கேட்டுள்ளார். யார் கேள்வி கேட்டாலும், எங்கேயிருந்து படித்து கேட்டாலும் பதில் சொல்வது நமது கடமையாகும்.
கீழ்கண்ட தலைப்புகளில் இக்கேள்விக்கான பதிலை காண்போம்:
1. லூசிபரும் ஏசாயா 14:12ம் வசனத்தின் மொழியாக்கங்களும்
2. ஏசாயா 14:12 – ஒரு அரசன் பற்றி வசனம் பேசும்போது, அது எப்படி சாத்தான் பற்றிய விவரமாக அமையும்?
3. எசேக்கியேல் 28 ஆம் அதிகாரமும் சாத்தானும்
4. இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?
5. அல்லாஹ் கூட லூசிபர் தானா?
6. முடிவுரை
1) லூசிபரும் ஏசாயா 14:12ம் வசனத்தின் மொழியாக்கங்களும்
லூசிபர் என்ற வார்த்தை பைபிளில் எங்கும் இல்லை. இது ஒரு இலத்தின் மொழி வார்த்தையாவும். எபிரேய மொழியில் இருக்கும் பழைய ஏற்பாட்டை இலத்தீன் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும்போது, ஹெலெல் / ஹெலைல் என்ற எபிரேய வார்த்தைக்கு, லூசிபர் என்று மொழியாக்கம் செய்தார்கள்.
இதைப் பற்றி வரும் ஏசாயா 14:12ம் வசனத்தை, தமிழிலும், ஆங்கிலத்திலும் (KJV & NIV), இலத்தின் மொழியிலும் படிப்போம்.
ஏசாயா14:12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
KJV – Isaiah 14:12 How art thou fallen from heaven, O Lucifer, son of the morning!how art thou cut down to the ground, which didst weaken the nations!
NIV – Isaiah 14:12 How you have fallen from heaven, morning star, son of the dawn!You have been cast down to the earth, you who once laid low the nations!
இலத்தின் மொழியாக்கம்: Isaiah 14:12:
quomodo cecidisti de caelo lucifer qui mane oriebaris corruisti in terram qui vulnerabas gentes
விடிவெள்ளி நட்சத்திரம் (லூசிபர்) என்ற வார்த்தையின் எபிரேய பொருள்:
Pronounce: hay-lale’
Strong: H1966
Orig: from 1984 (in the sense of brightness); the morning-star:–lucifer. H1984
Use: TWOT-499a Noun Masculine
Grk Strong:
Lucifer = “light-bearer”
1) shining one, morning star, Lucifer
1a) of the king of Babylon and Satan (fig.)
2) (TWOT) ‘Helel’ describing the king of Babylon
இலத்தின் மொழியில் லூசிபர் என்றால் “வெளிச்சம் கொடுப்பவன்” அல்லது காலையில் பிரகாசமாக தோன்றும் “வீனஸ் கிரகம்” என்று அர்த்தம். அதிகாலையில், வீனஸ் கிரகம் ஒரு நட்சத்திரத்தை போல ஜொலிப்பதை பார்க்க முடியும். இதனை தமிழில் சொல்ல வேண்டுமென்றால், “அதிகாலையில் காணப்படும் வெள்ளி கிரகமாகும்”.
ஆங்கில மொழியாக்கங்களும் லூசிபர் என்ற பெயரும்:
அதிகாலையில் நமக்கு காணப்படும் பிரகாசமான நட்சத்திரத்தை இலத்தீனில் மொழியாக்கம் செய்யும்போது லூசிபர் என்று மொழியாக்கம் செய்தது அந்த மொழிக்கு சரியான வார்த்தையாகும். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இலத்தினை விட்டு வேறு மொழிகளில் அந்த வார்த்தையை மொழியாக்கம் செய்யும்போது:
அதிகாலையில் தோன்றும் பிரகாசமான நட்சத்திரமே என்றோ அல்லது
பிரகாசமான ஒளியே என்றோ அல்லது
விடிவெள்ளி நட்சத்திரமே என்றோ
மொழியாக்கம் செய்வது தான் சரியானதாக இருக்கும். இலத்தீன் மொழியின் ஒரு பெயரை அப்படியே நம் மொழியில் எழுதுவது சரியானது அல்ல.
King James Version (KJV) என்ற ஆங்கில மொழியாக்கத்தில், இலத்தீன் வார்த்தையாகிய லூசிபர் என்ற வார்த்தையை மொழியாக்கம் செய்யாமல் அப்படியே பயன்படுத்தினார்கள். இது தவறான மொழியாக்கமாகும், அதாவது ஆங்கிலத்தில் “லூசிபர்” என்ற பெயர் பொதுவாக யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை. வேறு சில மொழியாக்கங்களில் லூசிபர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு தமிழ் மொழியாக்கத்தில் ஏசாயா 14:12ல் “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே” இன்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார். ஆங்கில NIV மொழியாக்கத்தில்: “morning star, son of the dawn!“ என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
லூசிபர் என்ற வார்த்தையினால் உண்டாகும் சங்கடம் என்ன?
லூசிபர் என்ற வார்த்தை KJV போன்ற மொழியாக்கங்களில் சாத்தானுக்கு பயன்படுத்தப்பட்ட படியினால், அந்த வார்த்தையை வேறு ஒரு விவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். லத்தீன் மொழியில் இன்றுகூட வெள்ளி கிரகத்தை குறிக்கும்போது லூசிபர் என்றே குறிப்பிடுகிறார்கள், பிரகாசமான ஒன்றை குறிப்பிடும்போது லூசிபர் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் மற்றும் கிறிஸ்தவ வட்டாரங்களில் லூசிபர் என்று சொன்னால் அது சாத்தானை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. இது தவறான மொழியாக்கங்களினால் உண்டான பிரச்சனையாகும். இது ஒரு பெரிய குற்றமல்ல, ஆனால் வேற்று மொழி வார்த்தையை நம் மொழிகளில் தேவையில்லாமல் பயன்படுத்தியதால் உண்டான ஒரு சங்கடம் மட்டுமே.
இதுவரை லூசிபர் என்ற வார்த்தை ஏசாயா 14:12ல் எப்படி மொழியாக்கம் செய்யப்பட்டது என்பதைப் பற்றி பார்த்தோம். அடுத்ததாக இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் ஒரு அரசனைப் பற்றியதா அல்லது சாத்தானை பற்றியதா என்பதை ஆய்வு செய்வோம்.
2) ஒரு அரசன் பற்றி வசனம் பேசும்போது, அது எப்படி சாத்தான் பற்றிய விவரமாக அமையும்?
முதலாவதாக ஏசாயா 14:12-17 வரைக்கும் படிப்போம்.
ஏசாயா 14:12-17
12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
16. உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
17. உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
இந்த அத்தியாயம் ஆரம்பத்திலிருந்து படித்தால், இஸ்ரேலின் எதிரியாக இருந்த பாபிலோன் அரசன் பற்றிய விவரமாக (4ம் வசனத்திலிருந்து) தொடங்கியிருக்கும். பாபிலோனிய அரசன் “விடிவெள்ளி நட்சத்திரமாக” (இலத்தீனில் லூசிபர்) அழைக்கப்படுகின்றான். இந்த அரசன் எப்படி தன்னுடைய மகிமையான நிலையிலிருந்து தள்ளப்பட்டான் என்பதை பற்றி இவ்வசனங்கள் பேசுகின்றன.
இவைகள் எப்படி சாத்தானுக்கு சொல்லப்பட்டதாக கருதமுடியும் என்ற கேள்வி நமக்கு எழும். இதனை புரிந்துக்கொள்ள, தீர்க்கதரிசிகள் மூலமாக தேவன் சொல்லும் ‘தீர்க்கதரிசன வசனங்கள்’ பற்றிய சில அடிப்படை விவரங்களை அறியவேண்டும்.
பொதுவாக பைபிளின் தீர்க்கதரிசன வசனங்களை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்:
1) நிகழ்காலம் அல்லது சில நாட்கள்/மாதங்களில்/வருடங்களில் நிறைவேற இருக்கும் வசனங்கள்:
சொல்லப்பட்ட காலத்தைச் சுற்றியும், பல நூறு ஆண்டுகள் கழித்து அல்லாமல், சில நாட்கள்/மாதங்கள்/வருடங்களுக்குள் நடப்பவைகள் பற்றியதாகவே இவ்வசனங்கள் அமையும். மேலும் சொல்லப்பட்ட நபரிடம் மட்டுமே நிறைவேறும் ஒன்றாகவே அவைகள் இருக்கும். இவ்வசனங்களில் யாரைப் பற்றி சொல்லப்படுகின்றதோ, அவரிடம் மட்டுமே நடக்கும் நேரடியான பொருளைக் கொண்டு இருக்கும். ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் பிள்ளை பிறக்கும் என்றுச் சொன்னதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
2) இரண்டாம் வகையான தீர்க்கதரிசன வசனங்கள், எதிர்காலத்தில் நடப்பவைகள் பற்றியதாகவே 100% இருக்கும்
மேசியா பற்றிய பழைய ஏற்பாட்டு வசனங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தில் வரும் சில வசனங்கள், சொல்லப்பட்ட காலத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடப்பவைகளாக இருந்தன. கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்கு கொடுப்பேன் என்று ஆபிரகாமிடம் தேவன் சொன்னது, பிறகு 400 ஆண்டுகளுக்கு பிறகு, அப்படியே அது நிறைவேறியது.
3) நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி கலந்து இருக்கும். அதே நேரத்தில் வெளிப்படையாக ஒருவர் பற்றியும், மறைமுகமாக இன்னொருவர் பற்றியும் பேசும் தீர்க்கதரிசன வசனங்களாக இருக்கும்:
ஒரு பக்கம் அவ்வசனங்கள் நிகழ்காலத்தில் சொல்லப்பட்ட நபருக்கு நடப்பவையாகவும் இருக்கும், அதே வேளையில் எதிர்காலத்தில் வேறு ஒரு நபருக்கு நடப்பவைகளாகவும் இருக்கும்.
ஏசாயா 14வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டவைகள் இரண்டு காலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. அதாவது, பாபிலோன் அரசனுக்கும்(அரசர்களுக்கும்) பொருந்தும், அதே நேரத்தில், சாத்தான் என்று சொல்லக்கூடிய ஒரு தேவ தூதனுக்கும் பொருந்தும். (கவனிக்கவும், இவ்வசனங்களில் சாத்தான் பற்றி சொன்ன விவரமானது அவனது கடந்த கால நிகழ்ச்சியையும், அவன் எதிர்காலத்தில் பெறப்போகும் தண்டனையைப் பற்றியும் ஒன்றாக சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது).
அ) 12ம் வசனத்தை கவனித்தால், பிரகாசமான நட்சத்திரமே என்று அழைப்பது, அந்த காலத்தில் இருந்த இராஜ்ஜியங்களில் மிகவும் பிரகாசமானதாக புகழின் உச்சியில் இருந்ததாக கருதப்பட்ட பாபிலோன் சாம்ராஜ்ஜியத்திற்கும் பொருந்தும், அதே வேளையில் தேவதூதனாக பிரகாசமானவனாக இருந்த சாத்தானுக்கும் அது பொருந்தும்.
ஆ) வானத்திலிருந்து விழுந்தாயே! என்ற வார்த்தைகளை கவனித்தால், பாபிலோன் அரசன் எப்படி வானத்திலிருந்து விழமுடியும்? என்ற கேள்வி எழும், அதே நேரத்தில் தேவனுடைய பிரசனத்திலிருந்து தள்ளப்பட்ட தூதனாக, இது சாத்தானுக்கு சரியாக பொருந்தும். மேலும், புகழின் உச்சியிலிருந்து விழுவதையும் ‘வானத்திலிருந்து விழுந்தாயே!’ என்று கூட பாபிலோன் அரசனைப் பார்த்து கூறமுடியும். ஆக, இரண்டிற்கும் இது பொருந்தும். ஒரே வாக்கியத்திற்கு இரண்டு பொருள் இருப்பது போல, இவ்வசனம் சொல்லப்பட்டுள்ளது.
இப்படி, 12 வசனத்திலிருந்து 17வது வசனம் வரைக்கும் சொல்லப்பட்டவைகளை ஆய்வு செய்தால், ஒவ்வொரு விவரமும் பாபிலோன் அரசனுக்கும், அதே வேளையில் சாத்தானுக்கும் பொருந்துவதையும் காணமுடியும். இதைப் பற்றி விவரமாக இன்னொரு கட்டுரையில் தேவைப்பட்டால் காணலாம்.
வலியச் சென்று ஏன் ஏசாயா 14ல் சாத்தான் பற்றி சொல்லப்பட்டதாக கருதுகிறீர்கள்?
மேலே படித்த வசனங்களை கவனித்தால், வலியச் சென்று நாமாக, சாத்தான் பற்றிய பொருளை கொண்டுவரவில்லை. அவற்றை படிக்கும் போது, மனிதர்களுக்கு ஏற்காத விவரங்கள் இருப்பதை காணமுடியும். உதாரணத்திற்கு, 13, 14ம் வசனங்களை கவனிக்கவும்:
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்;உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
இவைகள் மனிதனுக்கு பொருந்தாது, ஒரு ஆவிக்கு அல்லது தேவதூதனுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது,
வானத்துக்கு ஏறுவது,
சிங்கானத்தை நட்சத்திரங்களுக்கு மேலாக அமைப்பது,
மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் என்று கூறுவது,
மேலும் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று கூறுவது
போன்ற சொற்றொடர்கள், தேவ தூதனுக்கு சரியாக பொருந்துமே ஒழிய, மனித உலக அரசர்களுக்கு 100% பொருந்தாது.
எந்த ஒரு பாபிலோன் அரசனாலும், நட்சத்திரங்களுக்கு மேலாக சிங்காசனத்தை அமைக்கமுடியாது. எனவே, இவ்வசனங்களில் பாபிலோன் அரசன் அல்லாத இன்னொரு நபரும் சொல்லப்பட்டுள்ளான் என்று கருதுவதில் தவறு இல்லை.
அரசர்கள் & அதிகாரிகளுக்கு பின்னணியில் இயங்கும் சாத்தான்:
இன்னொரு வகையில் பார்ப்பதென்றால், பாபிலோன் அரசன் தன் மேட்டிமையினால் பேசினாலும் இருதயத்தில் நினைத்தாலும், அவனுக்கு பின்னால் இருப்பது சாத்தான் ஆவான். தீய காரியங்கள் சாத்தானின் தூண்டுதலினால் செய்யப்படுகின்றன. அவன் ஒரு அரசனுக்கு பின்னால் இருந்தால், எவ்வளவு பெரிய ஆபத்து வரும்? ஆகையால், அரசனுடைய மேட்டிமையை கடிந்துக்கொள்வதோடு கூட, ஆவிக்குரிய விதத்தில் சாத்தானையே கடிந்துக்கொண்டார் தேவன்.
கடைசியாக, சாத்தான் பற்றி வேறு இடங்களில் பைபிள் என்ன சொல்லியுள்ளது என்று ஆய்வு செய்தால், இவ்வசனங்கள் அவைகளோடு ஒத்துஇருப்பதைக் காணமுடியும்.
ஒரு அரசனைப் பற்றி தீர்க்கதரிசன வசனங்கள் சொல்லும்போது, அதோடு கூட சாத்தான் பற்றியும் சொல்லிய இன்னொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன், அப்போது தான் இதுவரை சொன்னவைகளில் உள்ள அர்த்தம் புரியும்.
எசேக்கியேல் 28ம் அத்தியாயத்திற்கு தாவுவோம் வாருங்கள், அங்கு பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.
3) எசேக்கியேல் 28 ஆம் அதிகாரமும் சாத்தானும்:
எசேக்கியேல் 28வது அதிகாரத்தில், மேலே பார்த்ததுபோல இன்னொரு அரசனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதே வசனங்களுக்குள் சாத்தான் பற்றியும் பல விவரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனங்கள் எப்படி நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகளை துல்லியமாக சொல்கின்றன என்பதையும் இதன் மூலம் அறியலாம்.
தீரு (Tyre) என்ற நாட்டை ஆண்ட அரசன் பற்றி இவ்வதிகாரத்தின் ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக 11 லிருந்து 15 வசனங்களில், தீரு அரசன் பற்றி சொல்லப்பட்டாலும், அவைகள் மனிதனாகிய அவ்வரசனுக்கு சிறிது கூட ஒத்துவராது, வேறு ஒருவனுக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணமுடியும்.
எசேக்கியேல் 28:11-15
11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
12. மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
13. நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
14. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
15. நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
சொல்லப்பட்ட விவரங்கள், தீரு அரசனுக்கு அல்ல, சாத்தானுக்கு சரியாக பொருந்துகிறது:
சாத்தான் ஞானத்தால் நிறைந்தவன்
பூரண அழகுள்ளவன்
தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்
பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் அவனை மூடிக்கொண்டிருக்கிறது
அவன் பிறந்தவன் அல்ல, சிருஷ்டிக்கப்பட்டவன்
அவன் கேருப் (மனிதனல்ல, தேவ தூதன்)
அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினான்
தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வைக்கப்பட்டவன்
அவன் மேட்டிமை கொண்ட போது தான் குறையுள்ளவனாக காணப்பட்டான்.
தீருவின் இராஜா, ஒரு கேருப் அல்ல, அவன் மனிதன்.
ஆனால் 11வது வசனம் தீரு ராஜாவைப் பார்த்து இவ்வசனங்கள் சொல் என்று எப்படி சொல்கிறது?
இதனால் தான் இதனை தீர்க்கதரிசனங்கள் என்றுச் சொல்கிறோம், தீரு ராஜா ஆட்சி செய்தாலும், அவன் பின்னணியில் ஆவிக்குரிய விதத்தில் ஆட்சி செய்வது சாத்தானே. எனவே தான், சில வசனங்கள் இராஜாவையும், சில வசனங்கள் சாத்தானையும் குறிப்பவைகளாக இருக்கின்றன.
இதே போலத்தான், ஏசாயா 14வது அத்தியாயத்திலும், பாபிலோன் அரசன் பற்றி சொல்லப்பட்டது, ஆனால் மறைமுகமாக சாத்தான் பற்றி சொல்லப்பட்டது. இங்கு தீரு அரசன் பற்றி சொல்லப்பட்டு, இன்னும் கூடுதல் விவரமாக சாத்தான் பற்றியும் சொல்லப்பட்டது. மேலோட்டமாக படித்தால், அரசன் பற்றி சொல்லப்பட்டதாகத் தெரியும், ஆனால் ஆய்வு செய்து பார்த்தால், மனித அரசனுக்கு பொருத்தமில்லாத சில குண நலன்களையும், சூழ்நிலைகளும் சொல்லப்பட்டுள்ளதைக் காணமுடியும்.
இதுவரை தீர்க்கதரிசன வசனங்கள் மேலோட்டமாக ஒரு பொருளிலும், ஆழமாக ஆய்வு செய்தால் இன்னொரு பொருளிலும் இருப்பதைக் கண்டோம்.
அடுத்தபடியாக, இயேசு கூட லூசிபர் தானா? என்ற கேள்விக்கு நம் பதிலைப் பார்ப்போம்.
4) இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?
முஸ்லிம்கள் கீழ்கண்ட விமர்சனத்தை வைத்ததாக நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கான பதிலைக் காண்போம்:
முஸ்லிம்களின் விமர்சனம்:
//பைபிளில் சாத்தான் என சொல்லப்படும் லூசிபர் மட்டும் தான் லூசிபரா என்று பார்த்தால் இல்லை . ஏசுவும் ஒரு லூசிபர் தான். ஆம் லூசிபர் என்றால் விடிவெள்ளி நட்சத்திரம். *ஏசுவும் தான் ஒரு விடிவெள்ளி நட்சத்திரம்* என்று கூறுகிறார்.
*வெளிபடுத்துதல் 22.16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.//
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் விவரித்தபடி, லூசிபர் என்பது ஆங்கிலச் சொல்லும் அல்ல, தமிழ்ச் சொல்லும் அல்ல, அது ஒரு இலத்தின் மொழிச் சொல். அதன் அர்த்தம் பிரகாசமான வெளிச்சம் தரக்கூடியவன் அல்லது நேரடி பொருளில் இலத்தின் மொழியில் வெள்ளி கிரகத்து (வீனஸ்), லூசிஃபர் என்று பெயர்.
இலத்தின் மொழி பேசுபவர்கள், மேடையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது, அவருக்கு புகழாரம் சூட்டவேண்டி, ‘ஓ பிரகாசம் கொடுப்பவரே (அ) வெளிச்சம் உடையவரே (அ) விடிவெள்ளி நட்சத்திரமே‘ என்று அழைக்கவேண்டுமென்றால், ‘ஓ லூசிபரே‘ என்று அழைப்பார்கள். இது மிகவும் மரியாதைக்குரிய சொல் அம்மொழியில்.
பல ஆண்டுகளாக, லூசிபர் என்ற வார்த்தையை நாம் துர்பிரயோகம் செய்து இருப்பதினால், கிறிஸ்தவ வட்டாரத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் மக்களிடையே லூசிபர் என்றுச் சொன்னால், அது சாத்தானை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது.
வெளிப்படுத்தல், 22:16ல் இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும் போது, ‘நான் விடிவெள்ளி நட்சத்திரமாக‘ இருக்கிறேன் என்றுச் சொல்கிறார். நான் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன் என்று இயேசு சீடர்களிடம் சொல்லியுள்ளார். மேலும், நீங்களும் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்றுச் சொல்லியுள்ளார்.
வெளிபடுத்துதல் 22:16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள், ஏசாயா 14:22ஐ எப்படி ‘விடிவெள்ளி நட்சத்திரம்’ என்று மொழியாக்கம் செய்தார்களோ, அதே போலத் தான் இங்கும் சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள். இலத்தின் மொழியின் பெயரைக் கொண்டு வந்து, எங்கும் அவர்கள் நுழைக்கவில்லை.
பாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) பாடல்:
இன்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில், ஈஸ்டர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் அல்லது ஜெபம் செய்யப்படுகின்றது. அதனை இலத்தின் மொழியில் கீழ்கண்ட விதமாக பாடுகிறார்கள், அதில் வரும் கடைசி வரிகளில், விடிவெள்ளி வெளிச்சம் என்ற சொற்றோடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலத்தின் மொழியில் இதற்காகவே உள்ள லூசிபர்(விடிவெள்ளி வெளிச்சம்) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
Wikipedia:
பாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) என்னும் பாடல், புனித சனியன்று பாஸ்கா திருவிழிப்பின் போது கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது திருத்தொண்டராலோ அல்லது குருவாலோ பாஸ்கா தீயையும் திரியையும் மந்திரித்த பிறகு, இறைவாக்கு வழிபாட்டிற்கு முன்பு பாடப்படும். ஆங்கிலிக்கம், லூதரனியம்போன்ற கிறித்தவ உட்பிரிவுகளிலும் இம்முறை உண்டு.
இலத்தின் மொழியில்:
Flammas eius lúcifer matutínus invéniat:
ille, inquam, Lúcifer, qui nescit occásum.
Christus Fílius tuus,
qui, regréssus ab ínferis, humáno géneri serénus illúxit,
et vivit et regnat in sæcula sæculórum.
R/ Amen.
தமிழில்:
உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்.
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.
எல்: ஆமென்
லூசிபர் என்ற இலத்தின் மொழி வார்த்தை தமிழ் பைபிளில் ஒரு இடத்திலும் இல்லை.
வேற்று மொழி பெயர்ச்சொற்களை சிலவேளைகளில் அப்படியே எழுதுகிறார்கள், அல்லது சிலர் தமிழில் மொழியாக்கம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு: பத்ரூஸ் என்ற வார்த்தையை தமிழில் பேதுரு என்று உச்சரித்துள்ளார்கள், பைபிள் சொசைடி ஆஃப் இந்தியா குழுவினர். ஆனால், கத்தோலிக்கர்கள் அவரை ‘ராயப்பர்’ என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். ராய் என்றால் ‘கல்’ அதோடு கூட ‘அப்பர்’ என்பதை சேர்த்து இராயப்பர் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். இரண்டும் சரியே.
இன்னொரு உதாரணம், மோடி கூட லூசிபர் தான்:
ஒரு எடுத்துக்காட்டுக்காக இந்த கற்பனை நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு மேடையில் நம் பாரத (பாரமான) பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை புகழ்ந்து பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மேடையில், மற்றும் அரங்கத்தில் இலத்தின் மொழி பேசுபவர்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும், இலத்தின் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.
ஒருவர் இப்படியாக பேசுகின்றார்:
ஆங்கிலத்தில்: Indian Prime Minister Mr. Modi is a Morning Star, the light giver to all of us.
இதனை தமிழில் இப்படி மொழியாக்கம் செய்வார்கள்:
பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நம் எல்லோருக்கும் ஒரு விடிவெள்ளி நட்சத்திரம் ஆவார்.
இதனை இலத்தின் மொழியில், எப்படி மொழியாக்கம் செய்வார்கள்?
பாரதப் பிரதமர் மோடி அவர்கள், ஒரு லூசிபர் ஆவார்.
(விடிவெள்ளி நட்சத்திரம் என்பதைப் மட்டும் நாம் லத்தீனில் கொடுத்துள்ளேன்)
ஆக, யாரெல்லாம் பிரகாசமாக வெளிச்சம் கொடுக்கிறார்களோ, இலத்தின் மொழியில் அவர்கள் அனைவரும் லூசிப்ர் என்று அழைக்கப்படுவார்கள்.
இதுவரை கொடுத்த விளக்கம் இன்னும் சில முஸ்லிம்களுக்கு புரியாமல் இருந்தால், அல்லது புரியாத மாதிரி அவர்கள் பாசாங்கு செய்தால், அடுத்த தலைப்பை படித்தவுடன் அவர்கள் சரியாக புரிந்துக்கொள்வார்கள் என்று லூசிபராகிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்
5) அல்லாஹ் கூட லூசிபர் தானா?
குர்ஆனின் படி அல்லாஹ் கூட ஒரு லூசிபர் தான் (இலத்தின் மொழியில்). அல்லாஹ்வின் 99 பெயர்களில் ‘அந்நூர்‘ வெளிச்சம் என்ற பெயரும் உள்ளது.
நூர் என்பது இது சாதாரண மங்கலாக இருக்கும் வெளிச்சம் அல்ல, இது பிரகாசமான வெளிச்சம் ஆகும். லூசிபர் என்றால் வெளிச்சம் தருபவன், வெளிச்சம் உடையவன் என்று அர்த்தம். இதன் படி பார்த்தல், இலத்தின் மொழியில் அல்லாஹ்வையும் லூசிபர் என்று அழைப்பதில் தவறில்லை.
குர்ஆன் 24:35ம் வசனத்தில் அல்லாஹ் தன்னை உலகின் ஒளி என்று கூறுகின்றான்: அல்லாஹ் கூட ஒரு இலத்தின் லூசிபர் (பேரொளி) என்பதற்கு இவ்வசனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்:
ஸூரத்துந் நூர் (பேரொளி) வசனம் 35
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
Italino Language Quran 24:35
இன்று லாத்தினோ என்ற மொழியானது, லத்தின் மொழி போன்றது தான்: இந்த இத்தாலினோ மொழியில் குர்ஆன்ன் 24:35 படித்தால், ஒளி என்ற வார்த்தைக்கு லூசி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கமுடியும்:
குர்ஆனின் 24வது அத்தியாயத்தின் பெயர்: ல லூசி
Sura XXIV
An-Nûr
(La Luce)
35. Allah è la luce dei cieli e della terra. La Sua luce è come quella di una nicchia in cui si trova una lampada, la lampada è in un cristallo, il cristallo è come un astro brillante; il suo combustibile viene da un albero benedetto, un olivo né orientale, né occidentale, il cui olio sembra illuminare, senza neppure essere toccato dal fuoco. Luce su luce. Allah guida verso la Sua luce chi vuole Lui e propone agli uomini metafore. Allah è onnisciente.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில், அல்லாஹ் தன்னை பிரகாசமான ஒளி நட்சத்திரமாகவும், தன்னுடைய ஒளியை தருபவனாகவும் அடையாளப்படுத்துகிறான், அதாவது லத்தீன் மொழியில் தன்னை ‘லூசிபர்’ என்று சொல்லிக்கொள்கிறான்.
முடிவுரை:
நம்மிடம் கேள்வி கேட்ட சகோதரருக்கு, என் மனமார்ந்த நன்றிகளை மற்றொரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நாம் கண்ட விவரங்களின் படி, லூசிபர் என்ற இலத்தின் வார்த்தை நம்மிடம் (சில ஆங்கில மொழியாக்கங்களில்) பெரும் பாடு படுகிறது என்பதை அறிந்தோம். மொழியாக்கங்களில் செய்யப்படும் சிறிய தவறுகள், சில வேளைகளில் இப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் King James Version மொழியாக்கத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதினால், லூசிபர் என்றுச் சொன்னாலே, எல்லோரும் சாத்தானையே குறிப்பிடுகிறார்கள். உண்மையில், வெளிச்சம் தருவபர்கள் அனைவரும் லூசிபரே! (இலத்தின் மொழியின் வார்த்தையின் படி, சாத்தானின் படி அல்ல).
மேலும், முஸ்லிம்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால், பைபிள் மீது ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் போது சிறிது ஆய்வு செய்து, மூல மொழிகளை படித்து முன்வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட விளக்கம் (ஓரளவிற்கு) உங்கள் சந்தேகத்தை தீர்த்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இருளில் இருந்த என்னை, தேடி வந்து, சந்தித்து என் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றிய இயேசுக் கிறிஸ்துவிற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.
அடிக்குறிப்புக்கள்:
1) Lucifer – en.wikipedia.org/wiki/Lucifer
3) பாஸ்கா புகழுரை – ta.wikipedia.org/s/xzn
4) Easter Proclamation or Exsultet – https://en.wikipedia.org/wiki/Exsultet
தேதி: 11 நவம்பர் 2018
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments